ராகு கேது பெயர்ச்சி.. ரிஷபத்திலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி.. திருநாகேஸ்வரம் கோவிலில் சிறப்பு வழிபாடு..
ராகுயெயர்ச்சியையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேசுவரத்தில் ராகு தலம் எனப் போற்றப்படும் நாகநாதசுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ராகு பகவான் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பின்னோக்கி நகர்வதை ராகு பெயர்ச்சி விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இன்று பிற்பகல் 3.13 மணிக்கு ராகு பகவான், ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதனையொட்டி, உற்சவர் ராகு பகவானுக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதணைகளும் நடைபெற்றது.
நவக்கிரகங்களில் முதன்மையானவராக திகழும் ராகு பகவான் நாகவல்லி, நாகக்கன்னி என இரு துணைவியருடன் மங்கள ராகுவாக இங்கு காட்சியளிக்கிறார்.
உற்சவருக்கு சிறப்பு அபிஷேகத்திற்கு பிறகு, கடங்கள் புறப்பாடும் நடைபெற்றது. பின்னர், மூலவர் ராகு பகவானுக்கு மஞ்சள், திரவியம், இளநீர், தேன், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகமும் ,மகா தீபாராதணையும் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர், ராகு பெயர்ச்சியை முன்னிட்டு, மேஷம், ரிஷபம், கடகம்,சிம்மம், துலாம்,விருச்சிகம்,தனுசு, மகரம்,மீனம் ஆகிய ராசிகாரர்களும் பரிகாரம் செய்துக்கொண்டனர். மேலும் ராகுபெயர்ச்சியை முன்னிட்டு, வரும் 23 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை லட்சார்ச்சனை நடைபெறவுள்ளது.