thieves attacked by People and sent to hospital and gave information to police ...
தஞ்சாவூர்
பெண்ணிடம் நகையை பறித்த திருடர்களை மடக்கி பிடித்து தரும அடி கொடுத்த மக்கள், அவர்கள் குறித்து போலீஸ்க்கு தகவல் கொடுத்துவிட்டு அவசர ஊர்தியில் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை மாநகராட்சி பகுதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் மோட்டார் சைக்கிள்களில் வரும் மர்ம நபர்கள், தங்க சங்கிலியை பறித்துச் செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேலும், பூட்டியிருக்கும் வீடுகளை குறிவைத்தும் கொள்ளை நடப்பது வாடிக்கையாடிவிட்டது. எனவே, மர்ம நபர்களை பிடிக்க காவலாளர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே நேற்று காலை பெண் ஒருவர் நடந்து சென்றபோது அவர் அணிந்திருந்த 4 சவரன் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பறித்து சென்றுவிட்டனர். இதுகுறித்து காவலாளர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோன்று, நேற்று பிற்பகல் தஞ்சை புதுக்கோட்டை சாலை ஓ.எம்.ராஜ் நகரில் பெண் நடந்து சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அந்தப் பெண்ணிடம் இருந்து தங்க சங்கிலியை பறிக்க முயற்சித்தனர்.
அந்த நேரத்தில் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டியதால் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். உடனே சுதாரித்துக் கொண்ட அந்த பெண், கீழே விழுந்தவர்களை பார்த்து திருடன்... திருடன்... என சத்தம் போட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். ஆனால், அதற்குள் அப்பகுதியில் மக்கள் சூழ்ந்துவிட்டனர். அவர்களை இருவரையும் விரட்டிச் சென்று பிடித்த மக்கள் அவர்களுக்கு தரும அடி கொடுத்தனர். இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
பின்னர் இதுகுறித்து தஞ்சை மருத்துவகல்லூரி காவலாளார்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள், பொதுமக்கள் உதவியுடன் திருடர்கள் இருவரையும் பேரையும் அவசர ஊர்தி மூலம் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிகிச்சை பெற்ற இருவரிடமும் காவல் ஆய்வாளர் பெரியசாமி விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள் தஞ்சை எல்.ஐ.சி. காலனி 5–ஆம் தெருவை சேர்ந்த அஜித் (21), இரயில்வே காலனியை சேர்ந்த சதீஷ் (21) என்பதும், இவர்கள் கூலி வேலை செய்து வருவதும் தெரியவந்தது.
இவர்கள் குறித்தும், இவர்கள் இதுவரை எங்கெல்லாம் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்தும் காவலாளர்கள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
