3 மனைவிகள், ஏராளமான நிலங்கள், லாரி-கார்-இருசக்கர வாகனங்கள் என ராஜ வாழ்க்கை வாழ்ந்த கொள்ளையனை கோட்டூர்புரம் போலீசார் கைது செய்துள்ளனர்

சென்னை, கோட்டூர்புரத்தைச் சேர்ந்தவர் ஆடிட்டர் அப்துல்லா. இவர் வெளியூர் சென்றிருந்தபோது, கடந்த 16 ஆம் தேதி அன்று இவரது வீட்டின் பூட்டை உடைத்து லாக்கரோடு பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து கோட்டூர்புரம் போலீசில் புகார் கொடுத்தார் அப்துல்லா.

இது குறித்த புகாரின்பேரில் போலீசார் சிசிடிவியில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தினர். அதில் சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (40) என்பவர் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

வெங்கடேசனைப் பிடித்து போலீசார் விசாரித்ததில், பணம் கொள்ளையடித்தை வெங்கடேசன் ஒப்புக் கொண்டார். ஏற்கனவே வெங்கடேசன் மீது 5 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

வெங்கடேசனிடம், போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கொள்ளையடித்த பணத்தில் வெளியூர்களில் நிலங்களை வாங்கியுள்ளது. கார், லாரி போன்ற வாகனங்களை வாங்கி வாடகை விட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், வெங்கடேசனுக்கு சென்னையில் 2 மனைவிகளும், வெளியூரில் ஒரு மனைவி என மொத்தம் 3 மனைவிகள் உள்ளது தெரியவந்தது. 1999 ஆம் ஆண்டில் இருந்து திருட்டு தொழிலில் இருப்பதாகவும், தமிழகம் முழுவதும் 15-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் இவர் மீது வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட வெங்கடேசனிடம் இருந்து 8 சவரன் நகை மற்றும் லாரி, இரு சக்கர வாகனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வெங்கடேசனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.