There is political grudge in giving paddy payment - TRP Raja MLA Charge ...

திருவாரூர்

பயிர்க்காப்பீடுத் தொகை வழங்குவதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இருப்பது தெளிவாக புரிகிறது என்று டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. குற்றம் சாட்டியுள்ளார்.

காவிரி டெல்டா விவசாயிகள் கடந்த ஆறு ஆண்டுகளாக குறுவை சாகுபடியை இழந்துவிட்டனர். நெருக்கடியான நிலையில் சம்பா சாகுபடியை மட்டுமே செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் 2015-16-ஆம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீடுத் தொகை வழங்கப்படாத நிலையில் கடன் பெற்றுதான் இந்தாண்டும் விவசாயிகள் சாகுபடியை தொடர்ந்துள்ளதால் விவசாயிகளுக்கு கடன் நெருக்கடி அதிகரித்துள்ளது. இது விவசாயிகளுக்கு தமிழக அரசு செய்துள்ள மிகப்பெரிய துரோகம்.

இது தொடர்பாக இன்று காலை திமுக சார்பில் மாவட்டச் செயலாளர் பூண்டி.கே.கலைவாணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் திருவாரூரில் நடைபெறுகிறது.

இதில் அனைத்து விவசாயிகளும் கட்சி பாகுபாடின்றி பங்கேற்றனர்.

இந்த ஆர்ப்பாட்ட்த்தில், டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ பேசியது:

“திருவாரூர் மாவட்டத்திற்கு ஒரு இலட்சத்து 13 ஆயிரத்து 688 எக்டேர் பரப்பளவுக்கு பயிர்க்காப்பீடு தொகைக் கிடைத்து உள்ளதன்படி 93 ஆயிரத்து 964 விவசாயிகளுக்கு ரூ.101 கோடியே 7 இலட்சம் இழப்பீடுத் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகை விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை. அதே சமயத்தில் மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியில் உள்ள உள்ளிக்கோட்டை, வடுவூர், மன்னார்குடி, நீடாமங்கலம் பிர்காக்களில் உள்ள விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீடுத் தொகை வழங்காமல் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு உள்ளது.

இதே போல தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மட்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் நன்னிலம் தொகுதியில் உள்ள அனைத்து பிர்காக்களை சேர்ந்த விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயிர்க்காப்பீடுத் தொகை வழங்குவதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இருப்பது தெளிவாக புரிகிறது” என்று பேசினார்.