புளூவேல் கேமால் தமிழகத்தில் தற்கொலை சம்பவங்கள் எதுவும் இல்லை எனவும் புளூவேல் கேம் விளையாட்டை குழந்தைகள் விளையாடாமல் தடுக்க எந்நேரமும் பெற்றோர்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் எனவும் சென்னை குற்றப்பிரிவு காவல் துணை ஆணையர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார். 

தற்கொலைக்கு தூண்டும் புளூவேல் ஆன் லைன் விளையாட்டில் ஈடுபட்டு உலகம் முழுவதும் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இந்தியாவில் மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சிலர் தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து, நீலத் திமிங்கிலம் போன்ற அபாயகரமான தற்கொலைக்குத் தூண்டும் ஆன் லைன் விளையாட்டுக்களை நீக்குமாறு சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், இதுகுறித்து பெற்றோர்களுக்கு எடுத்து கூறும் வகையில், சென்னை குற்றப்பிரிவு காவல் துணை ஆணையர் செந்தில்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், புளூவேல் விளையாட்டால் பல குழந்தைகள் தற்கொலை செய்து கொள்ளும் விபரீத முடிவுகளை எடுத்து வருவதாகவும், புளூவேல் கேமால் தமிழகத்தில் தற்கொலை சம்பவங்கள் எதுவும் இல்லை எனவும் தெரிவித்தார். 

குழந்தைகள் அதிகாலையில் எழுந்து சென்றால் கவனிக்க வேண்டும் எனவும், திகில் படங்களை பார்த்தால் உடனடியாக அவர்களை கண்காணிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். 

நீண்ட நேரம் குழந்தைகள் தனிமையில் இருந்தால் கவணிக்க வேண்டும்  எனவும் இந்த கேமை விளையாடும் குழந்தைகள் அதிக நேரம் செல்ஃபோன் பயன்படுத்துவார்கள் எனவும் தெரிவித்தார். 

மேலும் இந்த கேமால் மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் குறையும் எனவும், பள்ளியில் தூங்குவார்கள் எனவும் தெரிவித்தார்.