There is fairness in the fight for the traffic conglomerates Soon you need to get a smooth solution - good advice
திருப்பூர்
தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் போக்குவரத்து கழக தொழிலாளர்களின் போராட்டத்தில் நியாயம் இருக்கிறது என்றும் விரைவில் சுமூக தீர்வு எட்ட வேண்டும் என்றும் திருப்பூரில் நல்லக்கண்ணு தெரிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருப்பூர் மாநகர் 3–வது மண்டல கூட்டம் தாராபுரம் சாலை கரட்டாங்காட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு தலைமை குழு உறுப்பினர் செல்லமுத்து, கனகராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்டத் துணைச் செயலாளர் பழனிசாமி, மாவட்டப் பொருளாளர் ரவிச்சந்திரன், மண்டல செயலாளர் ராமசாமி ஆகியோர் முன்னிலைவகித்தனர்.
இந்தக் கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு பங்கேற்றுப் பேசினார்.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
"திருப்பூர் மாநகருக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த வேண்டும்.
திருப்பூரில் போதுமான வசதிகளோடு அரசு பல்நோக்கு மருத்துவமனையை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளை உடனடியாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநகர பகுதிகளில் நாள்தோறும் சாக்கடைகளை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சொத்துவரி, குடிநீர் கட்டணம் ஆகியவற்றை பல மடங்கு உயர்த்தும் முயற்சியை உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும்" என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்திற்கு பிறகு நல்லக்கண்ணு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்ட: "போக்குவரத்து கழக தொழிலாளர்களின் போராட்டம் நியாயமானது தான். கடந்த தீபாவளிக்கு முன்னதாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. அப்போதும் தற்காலிக தீர்வே எட்டப்பட்டது.
இந்த பிரச்சனையை உடனடியாக பேசி முடிப்பதற்கு மாறாக, தொழிலாளர் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. தற்போதையை பேச்சுவார்த்தையிலும் பிரச்சனைக்கான தீர்வு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்க மாநில அரசு முன்வரவில்லை. 19 தொழிற்சங்கங்கள் இணைந்து ஒன்றுபட்டு போராடி வருகின்றன.
இந்தப் போராட்டத்தில் நியாயம் இருக்கிறது. ஊழியர்களுக்கான பணம் ரூ.7 ஆயிரம் கோடியை மாநில அரசு வேறு விஷயங்களுக்காக எடுத்து செலவு செய்துவிட்டது. பல ஆண்டுகளாக கொடுக்க வேண்டிய பணத்தை திரும்ப கொடுக்கவில்லை. இதை எதிர்த்துதான் போராட்டம் நடக்கிறது.
இதற்கான பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும். இல்லையென்றால் இதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு அளிப்பார்கள். இது புது பிரச்சனை அல்ல. இதில் நல்ல தீர்வு எட்டப்பட வேண்டும். நியாயமான கோரிக்கை என்பதால் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவை திரும்ப பெற வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
