நீலகிரி

நீலகிரியில் பள்ளி மாணவ - மாணவிகளை காட்டு யானை துரத்தி சென்றதைக் கண்டு அந்தப் பகுதியில் திரண்டுவந்த மக்கள் யானையை விரட்டியதால் மாணவர்கள் உயிர் தப்பினர். 

நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா கிளன்வன்ஸ் பகுதியில் கடந்த மாதம் கால் வீக்கத்தால் நடக்க முடியாமல் 53 வயதான காட்டு யானை ஒன்று அவதிப்பட்டு வந்தது. 

இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் அந்த யானைக்கு வாழைத்தண்டு, மூங்கில், கூந்தப்பனை தழைகள் உள்ளிட்ட பசுந்தீவனங்களை இரவு பகலாக வழங்கி வந்தனர். மேலும் கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஊட்டச்சத்து உணவுகளை காட்டு யானைக்கு வனத்துறையினர் தொடர்ந்து வழங்கினர். பின்னர் கால் வீக்கம் குறைந்து காட்டு யானை வேகமாக நடந்து செல்லும் அளவுக்கு முன்னேற்றம் பெற்றதால் மருத்துவ சிகிச்சை மற்றும் பசுந்தீவனம் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை வனத்துறையினர் நிறுத்தினர். இருந்தும்  அந்த யானையை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில், வனத்துறையினரின் உபசரிப்பில் திளைத்துபோன காட்டு யானை பசுந்தீவனங்களை வனத்துக்குள் தேடி செல்லாமல் மக்கள் வாழும் கிராமங்களில் சுற்றி வருகிறது. எல்லமலை, பெரியசோலை, சீபுரம் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சில தினங்களாக காட்டு யானை முகாமிட்டு வந்தது. 

வனத்துறையினரைபோல மக்கள் பசுந்தீவனம் தருவார்கள் என்ற நினைப்பில் காட்டு யானை சுற்றி வருவதாக மக்கள் புகார் தெரிவித்தனர். இந்த நிலையில் எல்லமலை, பெரியசோலை, சீபுரம் பகுதிகளில் கடந்த சில தினங்களாக சுற்றி வந்த காட்டு யானையை அப்பகுதி மக்கள் விரட்டியடித்தனர்.

நியூகோப் பேக்டரி பகுதியில் காட்டு யானை நேற்று வந்தது. காலை 9 மணிக்கு பள்ளிக்கூடம் செல்வதற்காக ஆரோட்டுப்பாறையில் இருந்து பார்வுட் பகுதிக்கு சுமார் 40 மாணவ - மாணவிகள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது நியூகோப் பேக்டரி பகுதியில் நின்றிருந்த காட்டு யானை மாணவ -  மாணவிகளை துரத்தியது.

காட்டு யானையின் திடீர் வருகையை கண்ட மாணவ - மாணவிகள் கூச்சலிட்டவாறு ஓடினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மாணவர்களின் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டு வந்து காட்டு யானையை விரட்டியடித்தனர். இதனால் யானை அங்கிருந்து சென்றது. மேலும் பள்ளிக்கூட மாணவ - மாணவிகளும் பாதிப்பு இன்றி உயிர் தப்பினர். 

இதனிடையே காட்டு யானை அப்பகுதியில் உள்ள வாழை, பாக்கு உள்ளிட்ட விவசாய பயிர்களை தின்று சேதப்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த ஓவேலி வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். 

அப்போது அங்கு வந்த மக்கள் குடியிருப்பு பகுதியில் நுழைந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று கோரினர்.