கிருஷ்ணகிரி

தொடர்ந்து ரே‌சன் அரிசி கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு கிருஷ்ணகிரி ஆட்சியர் கதிரவன் அதிரடி உத்தரவுப் பிறப்பித்தார்.

தமிழகத்தில் இருந்து ரேசன் அரிசி அண்டை மாநிலங்களுக்கு, அண்டை நாடுகளுக்கும் இருசக்கர வாகனம், லாரி, கப்பல், மற்றும் இரயில் போன்றவற்றில் கடத்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

தண்ணீர் தரமாட்டேன் என்று அடித்துக் கூறும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்களுக்கு கூட தமிழகத்தில் இருந்துதான் அரிசி சப்ளை.

காவல்துறையினர் அவ்வப்போது ரேசன் அரிசி கடத்தலை தடுத்து நிறுத்தி கடத்தியவரை கைது செய்துவிட்டோம் என்று மார்தட்டிக் கொள்வதெல்லாம் பத்தில் ஒரு பங்குதான்.

எந்தவித இடையூறுமின்றி தமிழக ஏழை, எளிய மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரிசி சர்வ சாதாரணமாக மற்ற மாநிலங்களுக்கு கடத்தப்பட்டு வருகிறது. அதற்கு பணத்தாசை பிடித்து தமிழகத்தில் இருப்பவர்களே துணை போகிறார்கள் என்பதுதான் வருத்தப்பட வேண்டிய விசயம்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா சின்ன பர்கூர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் காமராஜ் (44). இவர் ரேசன் அரிசி கடத்திய வழக்கில் பலமுறை தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து இவர் ரே‌சன் அரிசி கடத்தி வருவதால் இவரைக் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கிருஷ்ணகிரி உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் முருகன், மாவட்ட ஆட்சியர் கதிரவனுக்கு பரிந்துரைத்தார்.

இதனையடுத்து காமராஜை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் கதிரவன் அதிரடி உத்தரவிட்டார்.