நீலகிரி

கூடலூர், பந்தலூர் தாலுகாவில் ஒரு நாள் முழுவதும் பெய்த கன மழையால் மரங்கள் சாய்ந்து, வீடுகளில் வெள்ளம் புகுந்து மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். மரம் விழுந்ததில் சாலையோர வியாபாரி ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை தென்மேற்குப் பருவமழையும், அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்குப் பருவமழையும் பெய்யும்.

கடந்த சில நாள்களாக கூடலூர், பந்தலூர், குந்தா தாலுகாக்களில் பருவமழைத் தீவிரம் அடைந்துள்ளது. ஆனால் ஊட்டி, குன்னூர் தாலுகாக்களில் சரிவர மழைப் பெய்யாததால் மக்கள் சற்றே வருத்தத்தோடு இருந்தனர்.

கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு பெய்யத் தொடங்கிய மழை நேற்று இரவு வரை பெய்து விலாசியது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி கூடலூரில் அதிகபட்சமாக 107 மி.மீட்டரும், தேவாலாவில் 115 மி.மீட்டரும் மழைப் பதிவாகியது.

கனமழையால் கூடலூர் தாலுகாவில் இருந்து தேவாலா அட்டி செல்லும் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. கூடலூர் புதிய பேருந்து நிலையம் அருகே கால்நடை மருத்துவமனை வளாகத்தில் இருந்த மரம் சரிந்து விழுந்ததில் சாலையோர வியாபாரி அஞ்சலை (வயது 35) படுகாயம் அடைந்தார்.

உடனே அப்பகுதி மக்கள் அவரை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பலத்த மழை காரணமாக கூடலூர் பகுதியில் உள்ள ஓவேலி கிளை ஆறுகள், பாண்டியாறு, மாயாறு, காளம்புழா, பொன்னானி, சோலாடி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கூடலூர் ஹெல்த்கேம்ப் பகுதியில் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு நான்கு வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதேபோல் காசிம்வயல் பகுதியில் 14 வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகினர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

கூடலூர் மார்த்தோமா நகர், நந்தட்டி உள்ளிட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொக்லைன் எந்திரம் மூலம் மண் மற்றும் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர்.

இதேபோல் வேடன்வயல் பகுதியில் மண்சரிவு ஏற்படும் பகுதியில் வசித்து வந்த மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு இரண்டாம் வயல் அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.

கூடலூர், பந்தலூர் பகுதியில் பெய்து வரும் கனமழையால் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் ஓடுகிறது. தேன்வயல் ஆதிவாசி கிராமத்திற்குள் வெள்ளம் புகுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய் ஆய்வாளர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர்கள் ராஜ்கமல், மோசஸ் உள்ளிட்ட வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர் பாதிக்கப்பட்ட 16 குடும்பத்தினரை மீட்டு புத்தூர்வயல் அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உணவு, உடை போன்றவற்றை வருவாய் துறையினர் வழங்கினர்.