மத்திய அரசு தொகுதி சீரமைப்பு நடவடிக்கையை தொடங்கியுள்ளதால், தமிழகத்தில் 8 தொகுதிகள் வரை பறிபோகும் அபாயம் உள்ளது. இதுகுறித்து விவாதிக்க மார்ச் 5ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக அமைச்சரவை கூட்டம்

தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின், தொகுதி சீரமைப்பு நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளதாக தெரிவித்தார். இதன் படி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 8 தொகுதிகளில் பறிபோகும்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறினார். எனவே இது தொடர்பாக ஆலோசிக்க தேர்தல் ஆணையத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள 40 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு

அதன் படி, மார்ச் 5 ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறவுள்ளதாக கூறினார். தமிழகத்தின் குரல் நசுக்கப்படுகிறது. இது மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சினை. தொகுதி சீரமைப்பு நடந்தால் 31 தொகுதிகள் தான் தமிழகத்திற்கு கிடைக்கும். தென் இந்தியாவில் தலைக்கு மேல் கத்தி தொங்குவதாக தெரிவித்தார். மேலும் தமிழகத்தின் கொள்கையை வலியுறுத்த வேண்டும் என்றால் தொகுதிகள் முக்கியம். மும்மொழிக் கொள்கை, நீட் பிரச்சினை உள்ளிட்ட அனைத்துக்குமே எம்பிக்கள் அதிகமாக இருந்தால் தான் தீர்வு கிடைக்கும். எனவே இது தொடர்பாக ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழகம்

இதனை தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலான மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை மிகுந்த ஆபத்தாக இருப்பதை அனைவரின் கவனத்துக்கும் கொண்டு வருகிறேன். மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு முதலிய தென் மாநிலங்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன. ஆனால், அதுவே நாடாளுமன்றத்தில் நம் பலம் குறையக் காரணமாகி விடும்; நம் குரலை நசுக்கிவிடக் கூடும் என்றால் அது எவ்வகையில் நியாயமாகும்?

ஓரணியில் திரள்வோம்! சூழ்ந்துள்ள ஆபத்தை நம் ஒற்றுமையால் வெல்வோம்!

ஜனநாயக முறையில் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்தும் எந்த நடவடிக்கையினையும் செய்யவே கூடாது என்பதல்ல எங்கள் வாதம். அதற்காக, தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தில் சமரசம் செய்துகொள்ளும் பேச்சுக்கே இடமில்லை! கூட்டாட்சியியல் கோட்டுபாடுகளைப் பாதுகாக்கும் விதத்தில், நியாயமான, வெளிப்படைத்தன்மை மிக்க ஒரு வழிமுறையைப் பின்பற்றுங்கள் என்றுதான் நாங்கள் கேட்கிறோம்.

இச்சூழ்நிலையில், தமிழ்நாட்டின் எதிர்காலத்தைப் பாதிக்கும் இந்த மிக முக்கியப் பிரச்சினையைப் பற்றிக் கலந்தாலோசிப்பதற்காக, தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் அனைத்திற்கும் அழைப்பு விடுக்கிறேன். நம் தாய்த் தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் காக்க, கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஓரணியில் திரள்வோம்! சூழ்ந்துள்ள ஆபத்தை நம் ஒற்றுமையால் வெல்வோம்! என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.