காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் நடைப்பெற்ற சுதந்திர தின விழாவில் ஆட்சியர் பொன்னையா தேசிய கொடி ஏற்றிவைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கி காவலாளர்களின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார். பின்னர் நடைப்பெற்ற சமபந்தியிலும் பங்கேற்றார்.

காஞ்சிபுரம் மாவட்டம், அறிஞர் அண்ணா காவல் அரங்கத்தில் சுதந்திர தின விழா நடைப்பெற்றது. இதில், தேசிய கொடியை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஏற்றி வைத்து காவலர், ஊர்காவல்படை உள்ளிட்டோரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

பிறகு திறந்த ஜீப்பில் காவலாளர்களின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார். பின்னர் ஆட்சியர் பொன்னையா ஓய்வுப் பெற்ற தியாகிகளுக்க்கு கதர் ஆடை அணிவித்து கௌரவித்தார். முன்னாள் படைவீரர் நலத்துறை மூலம் திருமண உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளாக மொத்தம் ரூ.73 இலட்சத்து 75 ஆயிரத்து 763 -ஐ ஆட்சியர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் துறை அதிகாரி க.சௌரிராஜன், காஞ்சிபுரம் சரக காவல் டி.ஐ.ஜி. தேன்மொழி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் அதிமானி, மாவட்ட பொதுப்பணித்துறை உயரதிகாரி முத்தையா, மாவட்ட திட்ட இயக்குனர் ஜெயகுமார், காஞ்சிபுரம் வருவாய் கோட்ட அதிகாரி பன்னீர்செல்வம், காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன் ஆகியோர் பங்கேற்றனர்.

விழாவின் இறுதியில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சுதந்திரதின விழா வழிபாடு மற்றும் சமபந்தி விருந்து நடந்தது. மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா சமபந்தி விருந்தில் கலந்து கொண்டார். கோவில் செயல் அலுவலர் முருகேசன் விழா ஏற்பாடுகளை செய்திருந்தார்.

மேலும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடந்த சமபந்தி விருந்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். கோவில் செயல் அலுவலர் விஜயன் ஏற்பாடுகனை செய்திருந்தார்.

காஞ்சீபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில் நடந்த சமபந்தி விருந்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரமணி, செயல் அலுவலர் வெள்ளைச்சாமி ஆகியோர் செய்திருந்தனர்.