நெல்லை,

நெல்லையில், வங்கிகளில் தட்டுப்பாடு இல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு பணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வங்கியை முற்றுகையிட்டு தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் பணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் வங்கி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி நெல்லை மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் சார்பில் நெல்லை திருபுரத்தில் உள்ள ஒரு வங்கி முன்பு நேற்று காலை முற்றுகைப் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு மாநில செயலாளர் மணியாச்சாரி தலைமை தாங்கினார்.

வங்கிகளில் தட்டுப்பாடு இல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு பணம் வழங்க வேண்டும். அனைத்து ஏ.டி.எம். மையங்களிலும் பணம் நிரப்பி வைக்க வேண்டும். மாதச் சம்பளம் சிரமம் இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த முற்றுகைப் போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்தில் மாவட்ட செயலாளர் சடையப்பன், தொழிற்சங்க நிர்வாகிகள் சுப்பையா, பண்டாரம், சண்முகசுந்தரம், நல்லதம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அனுமதி இல்லாமல் முற்றுகை போராட்டம் நடத்திய தொழிற்சங்க நிர்வாகிகள் 35 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நெல்லைச் சந்திப்பில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.