நாமக்கல்

35 ஆண்டுகளுக்கு முன்புக் கட்டப்பட்டக் கழிப்பிடத்தைத் திறக்கக் கோரி இராசிபுரம் தாசில்தார் அலுவலகம் முன்பு பாமக-வினர் ஆதார் அட்டையைத் திரும்ப ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் நகராட்சி 20 மற்றும் 21–வது வார்டுகளைச் சேர்ந்த மக்களின் வசதிக்காக சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்புக் கட்டப்பட்டக் கழிப்பிடம் உள்ளது.

இந்தக் கழிப்பிடத்தைத் திறக்க கோரி பலமுறை நகராட்சியில் மனு கொடுத்தும் கழிப்பிடத்தைத் திறக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனைக் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆதார் அட்டையைத் திரும்ப ஒப்படைக்கும் போராட்டம் இராசிபுரம் தாசில்தார் அலுவலகம் முன்பு நடந்தது.

இந்த போராட்டத்திற்கு பா.ம.க. மாநில மாணவர் சங்க ஆலோசகர் வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜ் தலைமை வகித்தார். ஒருங்கிணைந்த பா.ம.க. மாவட்ட அமைப்புச் செயலாளர் மோகன்ராஜ், மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் டி.பாலு, நகரச் செயலாளர்கள் மணிகண்டன், சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாநில இளைஞர் அணித் தலைவர் உமாசங்கர், முன்னாள் மாவட்டச் செயலாளர் பழனிசாமி, மாவட்டத் துணைச் செயலாளர் மூர்த்தி, முன்னாள் மாவட்டத் தலைவர் லோகநாதன், மாரியப்பன் மற்றும் பெண்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

அவர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் கோரிக்கை மனுவை தாசில்தார் ரத்தினத்திடம் வழங்கினர். அந்த மனுவைப் பெற்றுக் கொண்ட தாசில்தார் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

தாசில்தாரின் வாக்குறுதியை ஏற்று அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.