ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வலியுறுத்தி சென்னை மெரினாவில் கல்லூரி மாணவர்கள் ஒரு வாரமாக போராட்டம் நடத்தினர். கடந்த 23ம் தேதி அதிகாலையில் போலீசார் தடியடி நடத்தி அனைவரையும் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இதனால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை கண்டித்து பல இடங்களில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தினர்.
இதையொட்டி சென்னை எண்ணூர் பகுதியில் நெட்டுக்குப்பம் மற்றும் தாழங்குப்பம் ஆகிய மீனவ கிராமங்களை சேர்ந்த மக்கள், கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதை கண்டித்து உண்ணாவிரதம் இருந்தனர். அப்போது, அந்த பகுதியில் அதிமுக பொது செயலாளர் சசிகலா படம் பதித்த பேனரை அதிமுகவினர் அமைத்து இருந்தனர்.

அப்போது, அங்கு வந்த மர்மநபர் சிலர், அந்த பேனரில் இருந்த சசிகலா படத்தை கிழித்துள்ளனர். இதனால், ஆத்திரமைடைந்த அதிமுகவினர், எண்ணூர் போலீசில் புகார் செய்தனர். அந்த புகாரில், உண்ணாவிரதம் இருந்த மீனவ சங்க நிர்வாகிகள், கிழித்ததாக கூறியிருந்தனர்.
அதன்பேரில் போலீசார், மேற்கண்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவ சங்க நிர்வாகிகளை காவல் நிலையம் கொண்டு சென்றனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையறிந்ததும், நூற்றுக்கு மேற்பட்ட மீனவ மக்கள் எண்ணூர் காவல் நிலையம் முன் திரண்டனர்.

பின்னர், காவல் நிலையத்தை முற்றுகையிட்ட அவர்கள், “யாரோ ஒருவர், சசிகலா போட்டோவை கிழித்ததற்கு, உண்ணவிரதம் இருந்த, மீனவ சங்க நிர்வாகிக்கள் மீது எப்படி வழக்குப்பதிவு செய்யலாம். அதிமுகவில் சசிகலாவை பிடிக்காதவர்கள் நிறையேபேர் இருக்கிறார்கள். அவர்கள் அதை செய்து இருக்க மாட்டார்களா” என கேட்டு கோஷமிட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து போலீஸ் உயரதிகாரிகள், சம்பவ இடத்துக்கு சென்று, முற்றுகையிட்டவர்களிடம் சமரசம் பேசினர். மீனவ சங்க நிர்வாகிகள் பெயர், புகாரில் இருக்கிறது. என்னவென்று விசாரித்து அனுப்பிவிடுகிறோம் என கூறினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
