The semi-finished tiled tanks have become traces of monuments ...

விருதுநகர்

விருதுநகரில் அரைகுறையாக கட்டி முடிக்கப்பட்ட மூன்று மேல்நிலை தொட்டிகள் நினைவுச் சின்னங்களாக போல காட்சியளிக்கிறது. உடனே, இதனை கட்டிமுடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று மக்கள் கோரியுள்ளனர்.

விருதுநகரில் குடிநீர் மேம்பாட்டிற்காக மேல்நிலை குடிநீர் தொட்டிகளின் கட்டுமான பணிகள் முடக்கம் அடைந்துள்ளதால் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

விருதுநகரில் குடிநீர் விநியோகத்திற்காக ஏற்கனவே இருக்கும் மேல்நிலைத் தொட்டிகளின் கொள்ளளவு குறைவாக இருக்கிறது. இதனால், குடிநீர் விநியோகத்தின்போது பகிர்மானக் குழாய்களில் நீர் அழுத்தம் குறைகிறது. இதன் காரணமாக அனைத்துப் பகுதிகளுக்கும் சீராக குடிநீர் சென்று சேர்வதில்லை.

மேலும், நகரில் மிகுதியான குடிநீர் விநியோக மண்டலங்கள் உள்ளதால் குடிநீர் விநியோகத்தில் பிரச்சனை ஏற்படுவதாக பலமுறை சுட்டிக் காட்டப்பட்டது. இருந்தும் விநியோக மண்டலங்களை குறைக்க நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்த அதிக கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டிகள் கட்டுவதற்கு கடந்த முறை பதவியில் இருந்த நகராட்சி குழு முடிவு செய்தது.

அதன்பேரில், 10 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மூன்று மேல்நிலை குடிநீர் தொட்டிகள் கட்டுவதற்கு நகராட்சி நூற்றாண்டு சிறப்பு நிதியில் இருந்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

விருதுநகர் அகமது நகர், கல்லூரி சாலை, நாராயணமடம் தெரு ஆகிய பகுதிகளில் 10 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மூன்று மேல்நிலை குடிநீர் தொட்டிகள் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டு கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு நில வழிபாடு செய்யப்பட்டது.

இதில் அகமது நகர் பகுதியில் மட்டும் புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டுமானப்பணிகள் முடிந்து விட்ட போதிலும் குடிநீர் இணைப்புக் குழாய்கள் பதிக்கப்படவில்லை.

கல்லூரி சாலையில் மேல்நிலை குடிநீர் தொட்டியின் கட்டுமானப் பணியினை தொடங்கிய ஒப்பந்தக்காரர் பாதியிலேயே பணியினை நிறுத்திவிட்டு சென்றுவிட்டார். கட்டுமானத்திற்காக சேகரிக்கப்பட்டிருந்த பொருட்களையும் எடுத்துச்சென்று விட்டார்.

நாராயணமடம் தெருவில் மேல்நிலைத் தொட்டியின் கொள்ளளவை 7½ இலட்சம் லிட்டராக குறைத்துவிட்ட நிலையில் பணிகள் தொடங்கப்படாமல் நில வழிபாடு செய்த உடனே நின்றுவிட்டது.

இதுகுறித்து மக்கள் கூறியது:

“குடிநீர் பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் விருதுநகரில் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்துவதற்காக திட்டமிடப்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டிகளின் கட்டுமானப் பணியினை விரைந்து முடிக்க நகராட்சி அதிகாரிகள் உரிய அக்கறை காட்டாதது ஏன்? என தெரியவில்லை.

தேவையான நிதி ஒதுக்கீடு கையில் இருந்த போதிலும் ஒரே நேரத்தில் முன்று குடிநீர் தொட்டிகளின் கட்டுமானப் பணியினை தொடங்கி முடித்திருக்கலாம்.

குடிநீர் திட்டப்பணியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொள்ளாமல் மேல்நிலைத் தொட்டி கட்டுமானப் பணியினை ஒரே ஒப்பந்தக்காரரிடம் ஒப்படைத்ததால் திட்டப்பணிகள் முடக்கம் அடைந்து விட்டன.

அதன் பின்பாவது கட்டுமானப்பணியினை முடுக்கிவிட நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கையை எடுத்ததாக தெரியவில்லை.

எனவே மாவட்ட நிர்வாகம் இந்த பிரச்சனையில் தலையிட்டு குடிநீர் வினியோக மேம்பாட்டிற்கான 3 மேல்நிலை குடிநீர் தொட்டிகளையும் முழுமையாக கட்டி முடித்து விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரியுள்ளனர்.

அரைகுறையாக கட்டி முடிக்கப்பட்ட மேல்நிலை தொட்டிகள் பயன்பாட்டிற்கு வராமல் நினைவுச் சின்னங்களாக மாறிவிட்டது.