மண்டபம் அகதிகள் முகாமில் "லவ்ஜிஹாத்" என்ற பொய்ப்பிரச்சாரத்தின் மூலம் இஸ்லாமியர்களின் மீதான வெறுப்பை தமிழக காவல்துறை பரப்புவதாக பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
அகதிகள் முகாமில் லவ் ஜிகாத்தா
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியுள்ள பெண்கள் லவ் ஜிகாத் மூலம் மதமாற்றம் செய்யப்படுவதாக தமிழக காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்க்கு பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் மாநில செயலாளர் ஜெ.முகம்மது ரசின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "லவ் ஜிஹாத்" என்பது ஆர்.எஸ்.எஸ்-ம் அதன் துணை அமைப்புகளாலும் முன்னெடுக்கப்பட்ட முஸ்லிம் வெறுப்பு பிரச்சாரங்களின் ஒரு பகுதிதான் என்பதை நாடே அறியும். சங்பரிவார்கள் தொடர்ந்து இத்தகைய வன்ம பிரச்சாரத்தை முஸ்லிம்களுக்கு எதிரான கலவர உத்தியாக இதனை பயன்படுத்தி வருகின்றனர். எல்லா சமூகங்களிலும் இயல்பாகவே விருப்ப திருமணங்கள் நடைபெறுகிறது. ஆனால் சங்பரிவார்கள் இதனை லவ்ஜிஹாத் என பெயரிட்டு இஸ்லாத்திற்கு மதமாற்றம் செய்வதாக வன்மம் நிறைந்த பொய் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.பல்வேறு மாநிலங்களில் இந்த பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக, கேரளாவில் மிகப்பெரிய அளவிற்கு "லவ் ஜிஹாத்" விவாதங்கள் எழுந்த நிலையில், 'லவ் ஜிஹாத்' என்ற எதுவுமே இல்லையென கேரள காவல்துறை உயர்நீதிமன்றத்தில் தெளிவுப்படுத்தியது.

சுற்றறிக்கை அனுப்பியது யார்
இந்நிலையில், தமிழக உள்நாட்டு பாதுகாப்பு காவல்துறையின் சுற்றறிக்கை எந்தப் பின்னணியில் வெளியாகி உள்ளது என்பது குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும். பாஜக, தொடர்ந்து தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரங்களையும், மதக்கலவரங்களையும் ஏற்படுத்த காரணங்களை தேடி வரும் நிலையில், இந்த அறிக்கை வெறும் வாய்க்கு மெல்ல கொடுத்தது போன்று அமைந்துவிடும். காவல்துறையின் சமீபத்திய செயல்பாடுகள் மோடி அரசு மற்றும் பாஜக-விற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்துபவர்கள், சுவரொட்டிகள் ஒட்டுபவர்கள் என அனைவருக்கும் எதிராகவும் கடும் நெருக்கடிகளை கொடுத்து வழக்குகளை பதிவு செய்து வருகின்றது. இந்நிலையில் முஸ்லிம்களுக்கு எதிரான லவ்ஜிஹாத் என்ற வார்த்தை பிரயோகம் இடம்பெற்றுள்ளதின் மூலம், காவல்துறை யாருடைய கண்ணசைவிற்கு செயல்படுகிறது என்ற கேள்வி எழுகிறது. இந்த சுற்றறிக்கை தமிழக DGPக்கு தெரிந்து அனுப்பப்பட்டதா அல்லது இதில்வேறு ஏதெனும் உள்நோக்கம் உள்ளதா என்பதை தமிழக முதல்வர் உரிய முறையில் விசாரிக்க வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
