உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சரஸ்வதி நகரைச் சேர்ந்தவர் மலைராஜ். இவர் அப்பகுதியில் செங்கல் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

இவரது மாமனார் சாமிவேல் நேற்று இரவு ஒரு பெண்ணை அழைத்து வந்து இது நமது உறவுக்காரப்பெண், இங்கேயே தங்கி கொள்ளட்டும் என கூறியுள்ளார்.

இதையடுத்து இன்று காலை மலைராஜ் வேலைக்கு வராததை அறிந்த சக தொழிலாளர்கள் அவரைத் தேடி வீட்டுக்கு சென்றுள்ளனர்.

அப்போது, மலைராஜ், அவரது மனைவி ரஞ்சனி, மகள் அபிநயா, மாமனார் சாமிவேல் ஆகியோர் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.

இதைதொடர்ந்து அவர்களை மீட்ட தொழிலாளர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார் மேற்கொண்ட விசாரணையில் உறவினர் எனக்கூறி மலைராஜின் வீட்டில் தங்கிய மர்ம பெண், இரவு உணவுக்கு முன்பாக சமையலறைக்கு சென்று மயக்க மருந்தை கலந்து வைத்துள்ளது தெரியவந்தது.

மேலும், மலைராஜின் மனைவி கழுத்தில் இருந்த 7 சவரன் தங்க நகை, பீரோவில் இருந்த ரூ. 13 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றதும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.