பனவடலிசத்திரம்

பனவடலிசத்திரம் அருகே தண்ணீர்ப் பிரச்சனையில் கற்களால் தாக்கியதில் முதியவர் ஒருவர் கொலைச் செய்யப்பட்டார். அவரைத் தாக்கியவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

திருநெல்வேலி மாவட்டம் பனவடலிசத்திரம் அருகே உள்ள மேலநீலிதநல்லூர் கீழத்தெரு வடக்குப்பகுதியைச் சேர்ந்த விவசாயி சண்முகையா (70). இவருடைய மனைவி மாரியம்மாள் (65). இவர்களுக்கு குழந்தை இல்லை. அதே தெருவில் தெற்குப் பகுதியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (70). இவருடைய மனைவி தங்கம்மாள் (65).

இவர்கள் வசிக்கும் பகுதியான பனவடலிசத்திரத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் அந்தத் தெருவிற்கு வரும் குடிநீரை ஒரு நாள் ஒரு பகுதியினருக்கு என பிரித்து வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் புதன்கிழமை அன்று அந்த தெருவிற்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது. அப்போது தெற்குப் பகுதியினர் தண்ணீர் பிடிக்கும் முறை. இதில் வடக்குப்பதியைச் சேர்ந்த சண்முகையா, அவருடைய மனைவி மாரியம்மாளும் தண்ணீர் பிடிக்கச் சென்றுள்ளனர். அந்த இடத்தில் தெற்கு பகுதியைச் சேர்ந்த பொன்னுச்சாமி தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார்.

தண்ணீர் பிடிக்க வந்த சண்முகையா, அவருடைய மனைவியிடம் பொன்னுச்சாமி எங்கள் பகுதிக்கு வந்த தண்ணீர் நீங்க பிடிக்கக் கூடாது என்று சண்முகையாவிடம் கத்தியுள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த பொன்னுச்சாமி அருகில் கிடந்த கற்களை எடுத்து சண்முகையாவைத் தாக்கியதில் அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சண்முகையா சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து பனவடலிசத்திரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டதின் பேரில் காவலாளர்கள் வழக்குப்பதிவுச் செய்து பொன்னுச்சாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.