நீட் தேர்வு அடிப்படையிலேயே கலந்தாய்வு உடனே தொடங்க வேண்டும் என்றும், செப். 4 ஆம் தேதிக்குள் கலந்தாய்வை முடிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து தமிழகத்தில் நாளை மறுநாள் மருத்துவ மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு அளிப்பது தொடர்பாக தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. தமிழக அரசின் முன் வரைவுக்கு மத்திய அரசின் 3 துறைகள் அனுமதி அளித்தது. 

இந்த நிலையில், நீட் தேர்வு அடிப்படையிலேயே மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று சிபிஎஸ்இ மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடந்தது. அப்போது, மத்திய அரசு சார்பாக வாதாடிய வழக்கறிஞர், தமிழகத்துக்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என்று கூறினார். மத்திய அரசு கூறியதைத் தொடர்ந்து தமிழகத்தில் நீட் தேர்வு
அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், நீட் தேர்வு அடிப்படையிலேயே கலந்தாய்வு உடனே தொடங்க வேண்டும் என்றும் செப்டம்பர் 4 ஆம் தேதிக்குள் கலந்தாய்வை முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியது. நீட் தேர்வு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் தமிழக மாணவர்கள் வேதனைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நாளை மறுநாள் மருத்துவ மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும் என்றும், நாளை பிற்பகல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்றும் சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.