சேலம்

சேலத்தில் உள்ள தேக்கல்பட்டி ஊராட்சியில் ரூ.3 கோடியே 85 இலட்சத்தில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் ரோகிணி தொடங்கி வைத்தார்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள தேக்கல்பட்டி ஊராட்சியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 85 இலட்சம் மதிப்பில் மலையாளப்பட்டி முதல் ஜம்பூத்துமலை வரை செல்லும் 4 கிலோ மீட்டர் மண்சாலை தார்சாலையாக அமைக்கும் பணி தொடக்க விழா நடந்தது. 

இதில் மாவட்ட ஆட்சியர் ரோகிணி பங்கேற்று தார்சாலை அமைக்கும் பணியைத் தொடங்கி வைத்தார். இந்த விழாவுக்கு கள்ளக்குறிச்சி காமராஜ் எம்.பி., ஏற்காடு தொகுதி சித்ரா எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், மாவட்ட ஆட்சியர் ரோகிணி பேசியது: "முதலமைச்சர் ஆணையின்படி ஜம்பூத்துமலை கிராம மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இந்தச் சாலை அமைப்பதன் மூலம் நாமக்கல் மாவட்டம் கெடமலை என்கிற பகுதிக்கு மக்கள் எளிதாக செல்ல இயலும். இங்குள்ள மக்கள் பெரும்பாலும் விவசாயத் தொழிலையே மேற்கொண்டு வருகின்றனர். இங்கு முக்கியமாக அரளி பூ, தினை, சாமை, வரகு போன்ற பயிர்களையே உற்பத்தி செய்கின்றனர். 

இதுவரை இருந்த மண் சாலையில் மழைக் காலங்களில் மிக எளிதாக மண் அரிப்பு ஏற்படுவதன் காரணமாக கனரக வாகனங்கள் செல்ல இயலாத நிலை ஏற்பட்டிருந்தது. உற்பத்தி செய்யப்படும் விளை பொருட்களை எளிதில் எடுத்துச் செல்ல இயலாத சூழ்நிலை இருந்து வந்தது.

ஆனால், இச்சாலை அமைப்பதன் மூலம் விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களை எளிதாக அருகில் உள்ள பகுதியில் சந்தைப்படுத்தப்படுவதன் மூலம் இவர்களது வாழ்வாதாரம் நன்கு மேம்படும். 

மேலும், இச்சாலை அமைப்பதன் வாயிலாக இங்குள்ள மக்கள் மலையாளப்பட்டியில் அமைந்துள்ள துணை சுகாதார நிலையத்தில் எளிதாக மருத்துவ வசதி பெற ஏதுவாக அமையும்.

ஜம்பூத்துமலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு போக்குவரத்துக்கு எளிதாக இருப்பதால் கல்வித் தரத்தினை உயர்த்திக் கொள்ள வாய்ப்பாக இருக்கும்" என்று அவர் தெரிவித்தார்.

அதன்பின்னர், 554 பயனாளிகளுக்கு ரூ.73.90 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் ரோகிணி வழங்கினார். 

இந்த விழாவில் சேலம் சமூக காடுகள் கோட்ட வன அலுவலர் மகேந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் அருள்ஜோதி அரசன், நாமக்கல் மாவட்ட வன அலுவலர் மருத்துவர் காஞ்சனா உள்பட பலர் பங்கேற்றனர்.