The mystery of the teacher who entered the house of the teacher in the barracks

தருமபுரி

தருமபுரியில் பட்டப்பகலில் ஆசிரியையின் வீட்டில் புகுந்து 30 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம ஆசாமிகளை காவலாளர்கள் வலைவீசி தேடி வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம், நெல்லிநகர் பகுதியைச் சேர்ந்தவர் இராஜேஸ்வரி (45). இவர் காரிமங்கலம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவருடைய கணவர் பெருமாள் தருமபுரியில் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் காலை வழக்கம்போல இராஜேஸ்வரி பள்ளிக்குப் புறப்பட்டுச் சென்றார். பெருமாள் வீட்டை பூட்டிவிட்டு வெளியேச் சென்றார். சிறிது நேரம் கழித்து பெருமாள் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளேச் சென்று பார்த்தார். அங்கு, பீரோவில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள், துணிமணிகள் அனைத்தும் சிதறி கிடந்தன.

பீரோவின் உள்பகுதியில் உள்ள லாக்கரில் வைக்கப்பட்டிருந்த தங்க செயின், மோதிரம் உள்ளிட்ட 30 சவரன் நகைகள் திருடு போயிருந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இவற்றின் மதிப்பு சுமார் ரூ.6 இலட்சம் இருக்குமாம்.

பின்னர், இது தொடர்பாக பெருமாள் தர்மபுரி நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் ஆய்வாளர் இரத்தினகுமார் மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு நடத்தினர். பின்னர், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டம் விட்ட மர்ம ஆசாமிகள் இந்த நகை திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்று காவலாளர்கள் யூகித்தனர்.

இது தொடர்பாக தர்மபுரி நகர காவலாளர்கள் வழக்குப்பதிந்து பட்டப்பகலில் வீட்டில் புகுந்து கைவரிசையை காட்டிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனார்.