The introduction of HD setup box at the end of January
இம்மாத இறுதியில் ‘ஹெச்டி’ இணைப்பைத் தர முடிவெடுத்துள்ளோம். இதன்படி ரூ.225க்கு 380 வழக்கமான சேனல்களுடன் 30 ஹெச்டி தர சேனல்களும் கிடைக்கும் என அரசு கேபிள் டிவி நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம், முன்கூட்டியே கட்டணம் செலுத்தும் ‘பிரீபெய்டு’ திட்டத்துடன் கூடிய ‘ஹெச்டி’ செட்டாப் பாக்ஸ்களை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
`ஹெச்டி' தரம் கொண்ட செட்டாப் பாக்ஸ் தொடர்பாக அரசு கேபிள் டிவி நிறுவத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், "தற்போது பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ரூ.175க்கான 300 சேனல்கள் கொண்ட தொகுப்பையே விரும்பிப் பெற்றுள்ளனர். இந்தச் சேவையை மேம்படுத்தும் வகையில், இம்மாத இறுதியில் ‘ஹெச்டி’ இணைப்பைத் தர முடிவெடுத்துள்ளோம். இதன்படி ரூ.225க்கு 380 வழக்கமான சேனல்களுடன் 30 ஹெச்டி தர சேனல்களும் கிடைக்கும். இதற்கு வழக்கமான கட்டணத்துடன் 18 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.
அதேபோல, முன்கூட்டியே பணத்தைச் செலுத்தும் ‘பிரீ பெய்டு’ முறையும் விரைவில் கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். செட்டாப் பாக்ஸ்கள் பழுதடைந்தால் சரிசெய்யவும், மாற்றித் தரவும் மாவட்டத்துக்கு ஒரு சேவை மையம் அமைத்துள்ளோம். வாடிக்கையாளர்கள் 1800 425 2911 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது புகார்களைத் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக தமிழகத்தில் உள்ள கேபிள் டிவி நிறுவன வாடிக்கையாளர்களுக்கு இலவச செட்டாப் பாக்ஸ்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிச்சாமி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கிவைத்தார்.
இதுவரை 13,28,843 செட்டாப் பாக்ஸ்கள் இணைக்கப்பட்டு, செயல்பாட்டுக்கு வந்துள்ளன.சென்னையில் மட்டும் 30 ஆயிரம் செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்பட்டு, 22 ஆயிரம் பாக்ஸ்கள் இணைக்கப்பட்டுள்ளன.
