ஈரோடு,

ஒருபக்கம், கடும் வறட்சியால் விவசாயம் முடங்கியது. மறுபக்கம் வாங்கிய கடனை திருப்பிக் கேட்டு நிதிநிறுவனங்கள் தரக்குறைவாக பேசுவதால் பாதிக்கப்பட்ட பெண்கள் சமாளிக்க முடியாமல் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர்.

பெருந்துறை, சென்னிமலை, மொடக்குறிச்சி, அறச்சலூர், சிவகிரி, கொடுமுடி ஆகிய பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டனர். பின்னர், அவர்கள் தரையில் அமர்ந்து, வறட்சி நிவாரணம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்திற்கு ஈரோடு மாவட்ட அனைத்து மகளிர் சுய உதவிக்குழு ஒருங்கிணைப்பாளர் என்.ஆர்.வடிவேல் தலைமை தாங்கினார்.

இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்ததும் ஆட்சியர் அலுவலகத்திற்கூ காவலாளர்கள் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கடுமையான பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இதில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மேனகாவிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில், “ஈரோடு மாவட்டத்தில் அனைத்து கிராம பகுதிகளிலும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகிறது. இந்த குழுவில் உள்ள பெண்கள் தினசரி விவசாய கூலி வேலை செய்து வருகிறார்கள்.

தற்போது ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் விவசாய தொழில் முடங்கி உள்ளது. இதனை நம்பி உள்ள விவசாய கூலி தொழிலாளர்கள் எவ்வித வேலைவாய்ப்பும் இல்லாமல் குடும்பம் நடத்த முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் தனியார், பொதுத்துறை, கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை சிறு கடன்கள் பெற்றுள்ளனர்.

தற்போது வேலைவாய்ப்பு இல்லாததால் கடனை திருப்பி செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. இதனால் நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் தரக்குறைவாக பேசுகிறார்கள். எனவே மகளிர் சுய உதவிக் குழு பெற்ற சிறு கடன்களை வசூலிக்க கால அவகாசம் வழங்க வேண்டும்.

விவசாய கூலித்தொழிலாளர் குடும்பத்துக்கு ரூ.25 ஆயிரம் வறட்சி நிவாரணமாக வழங்க வேண்டும்” என்று அந்த மனுவில் தெரிவித்து இருந்தார்கள்.