The High Court Judges questioned Why did the excavator transform the head of keezhadi Archaeological

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி குழுத் தலைவரை மாற்றியது ஏன் என்றும்? அங்கிருந்து எடுக்கப்பட்ட பழங்கால பொருட்களை சிவகங்கையில் காட்சிக்காக ஏன் வைக்கப்படவில்லை எனவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

மதுரை அருகே உள்ள கீழடி கிராமத்தில் தொல்லியல் துறை நடத்திய அகழ்வாராய்ச்சியில் 2500 ஆண்டுகள் பழமையான தமிழர்களின் நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டது. 

இந்த அகழ்வாராய்ச்சியைக் கீழடி அகழாய்வுக் குழுவின் தலைவர் அமர்நாத் ராமகிருஷ்ணா ஆர்வத்துடன் நடத்திவந்தார்.
கீழடி அகழாய்வுப் பணி 2015 முதல் 2016 வரை இரண்டு கட்டங்களாக நடைபெற்றன. இந்த ஆய்வில், 5 ஆயிரத்துக்கும் மேல் தொல்பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டு தொல்லியல் துறையின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

இதைத் தொடர்ந்து, அமர்நாத் கீழடியில் மூன்றாம் கட்ட ஆய்வை மேற்கொள்ள வரைவுத் திட்டத்தை தொல்லியல் துறைக்கு அனுப்பியிருந்தார். 

ஆனால், மத்திய அரசு கீழடி ஆய்வுக்கு நிதி ஒதுக்குவதில் தாமதப்படுத்தி வந்தது. இந்நிலையில், தொல்லியல் துறை கீழடி ஆய்வுத் தலைவர் அமர்நாத் ராமகிருஷ்ணாவை கடந்த மார்ச் 24ஆம் தேதி அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள தொல்பொருள் பாதுகாப்பு மையத்துக்கு பணி இடமாற்றம் செய்தது. அமர்நாத் மட்டுமல்லாமல் அவருடன் கீழடியில் பணியாற்றிய 25 பேர்களும் பல்வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்தது. தொல்லியல் துறை அவருக்குப் பதிலாக கீழடி ஆய்வுக்கு ஸ்ரீராம் என்பவரைத் தலைவராக நியமித்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அமர்நாத் ராமகிருஷ்ணனை மீண்டும் இங்கு பணியில் அமர்த்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் இன்னும் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் வழக்கறிஞர் கனிமொழி மதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு நீதிபதிகள் ஆதித்யன் மற்றும் செல்வம் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்ததது.

இதனை விசாரித்த நீதிபதிகள், சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி குழுத் தலைவரை மாற்றியது ஏன் என்றும்? அங்கிருந்து எடுக்கப்பட்ட பழங்கால பொருட்களை சிவகங்கையில் காட்சிக்காக ஏன் வைக்கப்படவில்லை எனவும் அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர்.

இது குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை 23 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.