மன்னார்குடி அருகே கடன் பிரச்சனையால் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தாய், மகள், மகன் 3 பேரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். 

மன்னார்குடி சி.ஆர்.சி. டெப்போ முன்சிபல் காலனியை சேர்ந்தவர் தமிழரசி. இவரது கணவர் ஆலமுத்து வெளிநாட்டில் பணிபுரிந்த நிலையில், 3 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். 

இதைத் தொடர்ந்து தமிழரசி தனது குழந்தைகள் ஷாம், மனிஷா ஆகியோருடன் வசித்து வந்தார்.  ஸ்டூடியோ ஒன்றில் ஊழியராக பணியாற்றிய வந்த தமிழரசி, அதன் மூலம் கிடைத்த வருமானத்தை கொண்டு குழந்தைகளை படிக்க வைத்து வந்துள்ளார். ஆனால் அந்த வருமானம் போதாததால் அவதிப்பட்டுள்ளார். 

இறப்பதற்கு முன்பு கணவர் வாங்கிய கடனை கட்ட முடியாததால் மனமுடைந்த தமிழரசி கடந்த 24-ம் தேதி 2 குழந்தைகளுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு தானும் தற்கொலை முயற்சி செய்துள்ளார். 

இதையடுத்து மூவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில், மகன் ஷாம் உயிரிழந்த நிலையில், தாய் தமிழரசி மற்றும் மகள் மனிஷா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.  இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.