போலீஸ் டிஜிபி அலுவலக வாசலில் குட்கா பேனர் வைத்து கைதான சமூக ஆர்வலர் செந்தில் முருகனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

சென்னை புறநகர் பகுதிகளில் சில குட்கா நிறுவனங்களில் கடந்த ஆண்டு வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது.

சோதனையின்போது, தமிழகத்தில் விற்பனைக்கு தடை செய்யப்பட்ட பான், குட்கா உள்ளிட்ட பொருட்களுக்கு அனுமதி அளிக்க, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ஆவணங்கள் கிடைத்ததாக தகவல்கள் வெளியாகின.

பான், குட்கா விற்பனைக்கு லஞ்சம் பெற்றதாக அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல் துறை அதிகாரிகள் பதவி விலக வேண்டும் என்றும், தங்களின் குற்றமின்மையை  நிரூபித்த பிறகே அவர்கள் மீண்டும் பதவியில் அமர வேண்டும் என்ற பேச்சு பரவலாக பேசப்பட்டு வந்தது.

டிஜிபி அலுவலகத்தை குட்கா அலுவலகம் என குறிப்பிட்டு பேனர் வைத்த மதுரையைச் சேர்ந்த செந்தில் முருகன் என்பவரை போலீசார் கைது விசாரித்து வருகின்றனர்.

செந்தில் முருகனை கைது செய்யும்போது, குட்கா விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், டிஜிபி டி.கே. ராஜேந்திரனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் கோஷமிட்டார்.

இந்நிலையில் இதுகுறித்த வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் செந்தில் முருகனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளனர்.