தமிழகத்தில் விரைவில் நடக்கவிருக்கும் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டு இருக்கிறது பள்ளிக்கல்வித்துறை.
உலகம் முழுவதும் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவியுள்ளது. இந்தியாவிலும் ஒமைக்ரான் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 653 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக டெல்லியில் 142, மகாராஷ்டிராவில் 141, கேரளாவில் 57, குஜராத்தில் 49, தெலங்கானாவில் 41, தமிழ்நாட்டில் 34, கர்நாடகாவில் 31 மற்றும் ராஜஸ்தானில் 43 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 183 பேர் இதுவரை ஒமைக்ரான் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இதனிடையே கொரோனா காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதோடு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். அதற்கு முந்தைய கல்வியாண்டில் 1 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.
கொரோனாவால் மாணவர்களின் கல்வி, குறிப்பாக தேர்வு எழுதும் பழக்கம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் இந்த ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறுமா என்ற கேள்வி பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் எழுந்தது. நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ‘ஏப்ரல் கடைசி வாரத்திலோ அல்லது மே முதல் வாரத்திலோ பள்ளி பொதுத்தேர்வுகள் நடைபெறும்.மேலும் ஜனவரி 3வது வாரத்தில் திருப்புதல் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் 10, 12-ம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வுகள் அட்டவணையை வெளியிட்டுள்ளது அரசுத் தேர்வுகள் இயக்ககம். தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு முதலாம் திருப்புதல் தேர்வு ஜனவரி 19 முதல் தொடங்குகிறது என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவித்துள்ளார்.
அதன்படி 10ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு ஜனவரி 19 – 27 வரையிலும், 2ம் திருப்புதல் தேர்வு மார்ச் 21- 26 வரை நடைபெறும். இதுபோன்று 12ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு ஜனவரி 19 முதல் 28 வரையிலும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கான 2ம் திருப்புதல் தேர்வு மார்ச் 21 முதல் 29 வரை நடைபெறும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
