விழுப்புரம்,

விழுப்புரத்தில் தண்ணீரின்றி கருகிய பயிர்களைக் கண்டு இரண்டு விவசாயிகள் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விழுப்புரம் அருகே கொளத்தூர் அங்காளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சின்னத்துரை (50). இவருக்கு சொந்தமாக அதே கிராமத்தில் ஒரு ஏக்கர் நிலம் இருக்கிறது.

இந்த நிலத்தில் எப்போதும் ஏரி பாசன நீரை நம்பியே நெற்பயிரிடுவது வழக்கம். ஆனால் ஏரியில் தண்ணீர் இல்லாமல் வறண்டு போனதால் நெற்பயிரிடுவதற்கு பதிலாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தனது நிலத்தில் உளுந்து பயிர் செய்திருந்தார்.

ஆனால், பருவமழை பொய்த்துப் போனதன் விளைவாக நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயி சின்னத்துரை கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளார்.

இந்த நிலையில் கருகிய பயிர்களைக் கண்டு வருந்தி வந்த சின்னத்துரை நேற்று காலை தனது நிலத்திற்குச் சென்றுள்ளார். அப்போது கருகியப் பயிர்களை கண்டு அதிர்ச்சியில் இருந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார். பின், அந்த அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

இதேபோன்று செஞ்சி தாலுகா கணக்கன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகன் (51). இவர் மூன்று ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டு இருந்தார். ஆனால், போதுமான தண்ணீரின்றி பயிர்கள் கருகிவிட்டது.

கருகிய பயிர்களைக் கண்ட முருகன், அதிர்ச்சியில் வயலிலேயே மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.