வாணாபுரம்,
வாரச்சந்தையில் விற்பனைக்கு வந்த மாடுகள் எதிர்பார்த்த விலை போகாததால் விற்பனையாளர்கள் சோகத்துடன் மாட்டை வீட்டிற்கு திரும்ப அழைத்துச் சென்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா வாழவச்சனூரில் ஒவ்வொரு வாரமும் வாரச்சந்தை நடைபெறும். இந்தச் சந்தைக்கு தண்டராம்பட்டு, தானிப்பாடி, செங்கம், வாணாபுரம், தச்சம்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தியாகதுருகம், ரிஷிவந்தியம், திருக்கோவிலூர், மணலூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆடுகள், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் விற்பனைக்கு கொண்டுவரப்படும்.
அவற்றை பல்வேறு பகுதியில் இருந்து வரும் வியாபாரிகள் வாங்கி செல்வர்.
வாழவச்சனூரில் நேற்று வாரச்சந்தை நடைபெற்றது. இதனையொட்டி காலை முதலே வாரச்சந்தைக்குச் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து விற்பனைக்காக மாடுகள் கொண்டு வரப்பட்டன.
கறவை மாடுகள், காளைமாடுகள் என நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு கூடின.
சந்தையில் எப்போதும் போட்டி போட்டு கொண்டு வியாபாரம் நடக்கும். ஆனால், நேற்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட மாடுகளை வாங்க வியாபாரிகள் பெரிதும் ஆர்வம் காட்டவில்லை. அதனால் மாடுகளின் விற்பனை மிகவும் மந்தமாகவே இருந்தது.
இதனால், சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வந்த கறவை மாடுகள் எதிர்பார்த்த அளவுக்கு விலை போகாததால் அதனை மீண்டும் சிலர் வீட்டிற்க்கு அழைத்துச் சென்றனர்.
நாட்டு மாடுகளை பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து இருக்கும் வேளையில் இப்படி, கறவை மாடுகள் எதிர்பார்த்த அளவு விலை போகாமல் இருப்பது ஏமாற்றத்தை அளித்துள்ளது என்று அங்கு வந்த விற்பனையாளர்கள் சோகத்துடன் தெரிவித்தனர்.
