The Chief Minister house will be blockade on June 17
பொய் வழக்கு போட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேரை விடுவிக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் ஜூன் 17 ஆம் தேதி முதலமைச்சர் வீடு முற்றுகையிடப்படும் எனவும், மனித நேய மக்கள் கட்சியின் ஜவஹீருல்லா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிக் கட்டப் போரில் ஈழத் தமிழர்கள் பலர் இலங்கை ராணுவத்தால் கொலை செய்யப்பட்டனர்.
குண்டுகளை பயன்படுத்தக் கூடாது என்ற விதியையும் மீறி தமிழர்கள் அதிகம் வசித்த பகுதிகளான யாழ்ப்பானம்,திரிகோணமலை, மன்னார், வன்னி மற்றும் கிளிநொச்சி உள்ளிட்ட இடங்களில் குண்டுகளை வீசியது இலங்கை ராணுவம்.
இந்த இனப்படுகொலையை நினைவு கூறும் விதமாக சென்னை மெரினா கடற்கரையில் ஒவ்வொரு ஆண்டும் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்படுவது உண்டு.
ஆனால் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு பதவியேற்ற பிறகு நினைவேந்தல் நிகழ்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
தடையையும் மீறி நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்த மே 17 இயக்கத்தினர் கடந்த 17 ஆம் தேதி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
அப்போது காவல்துறைக்கும் நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் திருமுருகன் காந்தி, இளமாறன், டைசன், அனுன்குமார் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
இதை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் திருமுருகன் காந்திக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
அதன்படி மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவஹீருல்லா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பொய் வழக்கு போட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேரை விடுவிக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் ஜூன் 17 ஆம் தேதி முதலமைச்சர் வீடு முற்றுகையிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
