The brutal father who kills his daughter and his wife

கோழிக்கோட்டில் மனைவியை அயன்பாக்ஸால் சூடு வைத்து கொலை செய்தபோது தாயின் அலறலைக் கேட்டு அழுத ஒன்றரை வயது மகளை சுவற்றில் வீசியடித்து கொலை செய்த கொடூரனை காவலாளர்கள் கைது செய்தனர்.

கோழிக்கோடு மாவட்டம், குன்னமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் முகமதுபஷிர் (44). இவருடைய மனைவி சகிதா (37). இவர்களது மகள் கதிஜாதுல்மிஸ்திரி (1½).

முகமதுபஷிருக்கு சொந்த ஊர் கோழிக்கோடு மாவட்டம், வடகரா அருகே உள்ள மடப்பள்ளி ஆகும்.

முகமதுபஷிருக்கு தனது மனைவி சகிதாவின் மீது சந்தேகம் ஏற்பட்டதால் அடிக்கடி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் முகமதுபஷிர் அடிக்கடி தனது சொந்த ஊரான மடப்பள்ளிக்கு செல்வது வழக்கம்.

இந்த நிலையில் சம்பவத்தன்று வீடு திரும்பிய முகமதுபஷிருக்கும், அவரது மனைவி சகிதாவுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த முகமதுபஷிர் தனது மனைவி சகிதாவின் கை, கால்களை கயிற்றால் கட்டிப் போட்டு வீட்டில் இருந்த சலவை பெட்டியை தனது மனைவியில் உடலில் தேய்த்து சூடு வைத்துள்ளார். இதனால் வலி தாங்க முடியாமல் சகிதா அலறியபோது, வீட்டில் இருந்த குழந்தை கதறி அழுதது.

இதனால் படுக்கை அறையில் கிடந்த தலையணையை எடுத்து குழந்தையின் முகத்தில் வைத்து அழுத்தினார் முகமதுபஷிர். இதில் மூச்சு திணறி குழந்தை அவதிபட்டது. பின்னர் அந்த குழந்தையை தூக்கி சுவரில் வீசியதில் தலையில் பலத்த காயம் அடைந்த குழந்தை துடிதுடித்து அங்கேயே இறந்தது. பின்னர் தன் மனைவியை சலவை பெட்டியால் சூடு வைத்துக் கொன்றார்.

இறந்த குழந்தையை ஒரு பெட்டியில் அடைத்து தனது காரில் ஏற்றிக் கொண்டு அந்த காரை கோழிக்கோடு அரையடத்து பாலம் பகுதியில் நிறுத்தி, அங்கு குழி தோண்டி குழந்தையின் உடலைப் புதைத்தார்.

அதன்பிறகு மனைவியின் உடலை புதைக்க காரில் வந்த போது, அக்கம்பக்கத்து வீட்டினர் மற்றும் போலீசார் தன் வீட்டு முன்பு நிற்பதை பார்த்து அவர் தலைமறைவானார்.

இந்த நிலையில் அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு கோழிக்கோடு காவல் கண்காணிப்பாளர் ஜெயந்த், துணை ஆணையர் பிருத்விராஜ், சர்க்கிள் ஆய்வாளர் பைஜூ மற்றும் காவலாளர்கள் அவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் பாலக்காடு மாவட்டம், கல்லடிக்கோடு என்ற இடத்தில் பதுங்கியிருந்த முகமதுபஷிரை கைது செய்து நீதிமன்றத்தி ஒப்படைத்து பின்னர் சிறையில் அடைத்தனர்.