இராமநாதபுரத்தில் உள்ள கிராமத்திற்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக குடிநீர் விநியோகம் இல்லாததால், மக்கள் தண்ணீரை அதிக விலைக்கு வாங்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இராமநாதபுரத்தில் கடலாடி வட்டத்தில் ஆப்பனூர் ஊராட்சி தெற்கு கொட்டகைக் கிராமத்துக்கு காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. கடந்த 2 ஆண்டுகளாக இந்த குடிநீர் நிறுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
தெற்கு கொட்டகை கிராமத்தில் சுமார் 70 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த ஊருக்கு கடந்த 2 ஆண்டுகளாக காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. இதனால், பெண்களும், முதியோர்களும் சுமார் 10 கி.மீ. தொலைவு நடந்தேச் சென்று குடிநீர் எடுத்துவந்து பயன்படுத்திக் கொண்டிருந்தனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட குடிநீர் வாரியத்துக்கு எண்ணற்ற முறை மனு அளித்தும் எந்தவித பலனும் இல்லை.
இந்த நிலையில், தற்போது தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர். அதுவும், இங்கு இருக்கும் தண்ணீர் தட்டுப்பாட்டை தெரிந்து கொண்டவர்கள் தண்ணீரை அதிக விலைக்கு விற்கின்றனர். மக்களும் வேறு வழியின்றி அதிக விலைக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே, உடனடியாக தெற்கு கொட்டகை கிராமத்துக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மக்கள் மறுபடியும் தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
