திருநெல்வேலி

இரு சக்கர வாகனம் முதல் கனரக வாகனங்கள் வரை மத்திய அரசு அறிவித்துள்ள 13 வகையான கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலியில் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நெல்லைச் சந்திப்பு இரயில் நிலையம் முன்பு, திருநெல்வேலி மாவட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் (சி.ஐ.டி.யூ. இணைப்பு) சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தை சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் மோகன் தொடங்கி வைத்தார்.

முன்னதாக தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன பொது செயலாளர் சிவாஜி, பொது செயலாளர் ஈஸ்வர மூர்த்தி, தொழிற்சங்க நிர்வாகிகள் பெருமாள், காமராஜ், சுடலைராஜ் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்கள்.

அவர்களது கோரிக்கைகளாவன:

“வாகனங்கள் புதுப்பித்தலுக்காக உயர்த்தியுள்ள கட்டணத்தைத் திரும்பப் பெற வேண்டும். இரண்டு மாதம் கால தாமதத்திற்கு ரூ.100 அபராதம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டதை திரும்ப பெற வேண்டும்.

பெயர் மாற்றத்திற்கு தற்போது ரூ.625 என இருக்கும் கட்டணம் ரூ.1025–ஆக உயர்த்தப்பட்டதை திரும்ப பெற வேண்டும்.

இரு சக்கர வாகனம் முதல் கனரக வாகனங்கள் வரை மத்திய அரசு அறிவித்துள்ள 13 வகையான கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்” என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.