டிபி.சத்திரத்தில் நேற்றிரவு ரவுடி வெட்டி கொல்லப்பட்ட வழக்கில் அதே பகுதியை நேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் ஒருவனை தேடிவருகின்றனர். உறவினர் கொலைக்கு பழி வாங்கவே அவர் உபயோகப்படுத்திய கத்தியை வைத்து இந்த கொலை நடந்துள்ளதாக தெரிகிறது.

போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

சென்னை ஷெனாய் நகர் , ஜோதி அம்மாள் நகரில் வசித்தவர் முருகன் (எ) தீச்சட்டி முருகன் (34). இவர் மீது டி.பி.சத்திரம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. நேற்றிரவு 10 மணி அளவில் டி.பி.சத்திரம் பிரதான சாலையில் பாண்டியன் மளிகை கடை வைத்துள்ள தனது நண்பர் நாராயணன் என்பவருடன் கடைக்குள்ளே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் மளிகை கடைக்குள் புகுந்து தீச்சட்டி முருகனையும் மளிகை கடை உரிமையாளர் நாராயணனையும் சரமாரியாக வெட்டியது. இதில் தப்பிக்க வழியில்லாமல் பலத்த அரிவாள் வெட்டு காரணமாக மளிகைகடைக்குள்ளேயே தீச்சட்டி முருகன் உயிரிழந்தார்.

கடை உரிமையாளர் நாராயணனுக்கும் வெட்டுக்கள் விழுந்ததில் அவரும் ரத்த வெள்ளத்தில் கடைக்குள்ளே விழுந்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் பொதுமக்கள் ஓடிவருவதை பார்த்து அந்த கும்பல் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பித்து சென்றது. 

போலீசார் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடிவந்தனர். இந்நிலையில் டி.பிசத்திரத்தில் ரவுடி தீச்சட்டி முருகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதே பகுதியை சேர்ந்த மார்டின், ராஜேஷ், ரோகித், கோபி, ஆகாஷ் ஆகிய 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். 

இது தவிர மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட அனைவரும் தீச்சட்டி முருகனால் கொலைசெய்யப்பட்ட ரவுடி ஜெயராஜின் உறவினர்கள் ஆவர். பழிக்கு பழி வாங்கவே இந்த கொலை நடந்துள்ளது.

கொலைக்கான காரணம் பற்றி போலீசார் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது . ஜெயபாலன் என்ற ரவுடி டி.பி.சத்திரத்தில் பத்தாண்டுகளுக்கு முன்னர் பிரபலமாக இருந்தான். அவனது கூட்டாளிகளில் தீச்சட்டி முருகனும் ஒருவன். 

குற்றவழக்கு ஒன்றில் கைதாகி சிறையில் இருந்த ஜெயபாலன் சென்ட்ரல் ஜெயில் கலவரத்தின் போது போலீசார் துப்பாக்கி சூட்டில் பலியானான். அதன் பிறகு ஜெயபாலனின் தம்பி ஜெயலாஜ் நான் தான் இந்த ஏரியா தாதா என்று வலம் வந்துள்ளான். 

இது தீச்சட்டி முருகனுக்கு பிடிக்க வில்லை. இதனால் 2013 ஆம் ஆண்டு தீச்சட்டி முருகன் ஜெயராஜை கொலை செய்துள்ளான். ஜெயராஜை தீச்சட்டி முருகன் கொலை செய்ததால் அந்த ஏரியா தாதாவாக இருந்துள்ளான்.

 ஜெயராமன் கொலைக்கு பழிக்கு பழிவாங்க அவரது உறவினர்கள் திட்டம் தீட்டி நேரம் வரும் வரை அமைதியாக காத்திருந்துள்ளனர். தீச்சட்டி முருகனின் நடமாட்டத்தை அமைதியாக கண்காணித்து வந்துள்ளனர்.

தீச்சட்டி முருகன் நாராயணன் என்பவருடன் சேர்ந்து மளிகை கடை நடத்தி வந்ததும் தினமும் நாராயணன் கடையில் இரவில் அமர்ந்து பேசுவதும் தெரிய வந்துள்ளது. திச்சாட்டி முருகனை கொல்ல ஜெயராஜின் கத்தியையே பயன்படுத்தியுள்ளனர். 

நேற்றிரவு சமயம் பார்த்து கடைக்குள் நுழைந்து தீச்சட்டி முருகனை கொலை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மார்ட்டின் என்பவர் தான் இதில் மூளையாக செயல்பட்டுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.