tasmac shop should be closed these three days ordered by chennai collector

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை உற்சாகம் களை கட்டியுள்ளது. ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப் படுகிறது. பொங்கலுக்காக தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல பலரும் இப்போது முனைப்பு காட்டி வருகிறார்கள். காரணம், இதுவரை வேலை நிறுத்தத்தில் இருந்த போக்குவரத்துத் தொழிலாளர்கள் இன்று இரவு முதல் மீண்டும் வேலைக்குத் திரும்புவதாகக் கூறியுள்ளனர். இதனால் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று பொங்கல் பண்டிகை கொண்டாடுவதில் உற்சாகமாக உள்ளனர். 

வழக்கம் போல் பொங்கல் பண்டிகையை ஒட்டியும், காணும் பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகள் வருவதாலும் டாஸ்மாக் மதுபான விற்பனை அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஞாயிறு அன்று பொங்கல் பண்டிகை வருகிறது. மறுநாள் திங்கள் அன்று திருவள்ளுவர் தினம் வருகிறது. அடுத்த நாள் காணும் பொங்கல். இந்நிலையில், வழக்கம் போல் திருவள்ளுவர் தினத்தன்று மதுக்கடைகளை மூட சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவில், திருவள்ளுவர் தினம்(ஜன.15), குடியரசு தினம்(ஜன.26), வள்ளலார் நினைவுநாள்(ஜன.31) ஆகிய நாட்களில் சென்னையில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.