தமிழகத்தில் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என ஒரு சிலர், பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர். சிலர், உரிமம் இல்லாமல் பார்களை நடத்துவதுடன், பதுக்கி வைத்து சரக்குகளை விற்பனை செய்கின்றனர். மேலும், டாஸ்மாக் ஊழியர்கள ஒரு குவாட்டருக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை கூடுதலாக வைத்து விற்பனை செய்கின்றனர். இதுதொடர்பாக டாஸ்மாக் நிர்வாகத்துக்கு ஏராளமான புகார்கள் சென்றாலும், அதை சரி செய்ய முடியாமல் அதிகாரிகள் திணறுகின்றனர். 

குறிப்பாக பண்டிகை மற்றும் விழா காலங்களில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு டார்கெட் விதிக்கப்படுகிறது. இந்த தீபாவளி பண்டிகைக்கு பல கோடி ரூபாய் வசூல் செய்ய வேண்டும் என டார்கெட் நிர்ணயித்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், டாஸ்மாக் கடையில் கூடுதல் விலை கொடுத்து சரக்குகளை வாங்க வேண்டாம். அப்படி கடைக்கார்ரகள் பணத்தை கூடுதலாக கேட்டால், அதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கலாம் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு, கோவை, சென்னை ஆகிய மாவட்டங்களில் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் பேனர் வைத்துள்ளனர். இதனால், குடிமகன்களுக்கும், டாஸ்மாக் ஊழியர்களுக்கும் இடையே அடிக்கடி ஏற்படும் தகராறுகளை தடுக்க முடியும் என டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகின்றனர்.