Taranum monthly salary on the 7th BSNL Staff struggle

தூத்துக்குடி

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாதம் தோறும் 7–ஆம் தேதி சம்பளம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் தூத்துக்குடி பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்ட பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு தொலைத் தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் ஆகிய இரண்டு சங்கங்களும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் அலுவலகம் முன்பு நேற்று நடந்த இந்தப் போராட்டத்திற்கு பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பால்ராஜ் பட்டுக்குமார், ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை வகித்தனர்.

பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர்கள் ஜெயமுருகன், ராதாகிருஷ்ணன், பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்க மாநில அமைப்பு செயலாளர் கிறிஸ்டோபர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றுப் பேசினர்.

“ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாதம் தோறும் 7–ஆம் தேதி சம்பளம் வழங்க வேண்டும்,

மாதம் தோறும் சம்பள பட்டியல் வழங்க வேண்டும்,

2014–15, 2015–16–ம் ஆண்டுகளுக்கான கூடுதல் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்.

மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச சம்பளம் ரூ.350–ஐ கடந்த ஜனவரி 19–ஆம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும்” என்பது உள்ளிட்ட கோரிக்கையை இந்த போராட்டத்தின்போது வலியுறுத்தினர்.

இந்தப் போராட்டத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் ஏராளமாக பங்கேற்றனர்.

போராட்டத்தின் முடிவில் பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க பொதுமேலாளர் அலுவலக கிளை செயலாளர் ஜெயராஜ் நன்றித் தெரிவித்தார்.