Tamilnadu Temple Chariot Tragedy : தஞ்சாவூர் அருகே களிமேடு தேர் திருவிழாவின் போது தேர் வளைவில் திரும்பும் போது தேருடன் இருந்த ஜெனேட்டர் சிக்கியதில், அதனை சரி செய்யும் போது தேரின் உச்சி உயர்மின் அழுத்த கம்பியில் உரசியதில் மின்சாரம் பாய்ந்ததே விபத்திற்கு காரணம் என்று தீயணைப்புத்துறை விளக்கம் அளித்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் இன்று அதிகாலை தேர் திருவிழாவின் போது, தேரில் மின்சாரம் பாய்ந்து தீப்பிடித்து எரிந்ததில் சம்பவ இடத்திலே 11 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த 13 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தஞ்சாவூர் - பூதலூர் சாலையில் இருந்து 4 கி.மீ தொலைவில் களிமேடு எனும் கிராமத்தில் அமைந்துள்ள 150 ஆண்டுகள் பழமையான அப்பர் மடத்தில்,ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் அப்பர் சதய விழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி 94 ஆம் ஆண்டான மூன்று நாள் நடக்கும் அப்பர் சதய திருவிழா நேற்று தொடங்கியது. இந்நிலையில் இந்த திருவிழாவில் நேற்றிரவு அப்பர் மடத்திலிருந்து மின் அலங்கார தேர் புறப்பாடு தொடங்கியது.

தொடர்ந்து களிமேடு கிராமத்தில் உள்ள நான்கு வீதிகளிலும் தேர் வலம் வந்தது. கிராமத்தில் உள்ள அனைத்து வீட்டு மக்களும் தேங்காய் பழம் வைத்து வழிப்பாடு செய்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை 3.15 மணியளவில் தேரானது கீழ்த்தெருவிலிருந்து முதன்மை சாலைக்கு வந்து, அங்குள்ள திருப்பத்தில் திரும்பிய போது, அப்போது சுமார் 30 அடி உயரத்தில் உள்ள உயரழுத்த மின் பாதையில் தேரின் அலங்கார தட்டி உரசி விபத்து நேரிட்டது.இதில் தேரை பிடித்து வந்த 10 பேர் மின்சாரம் பாயந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 13 பேர் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவிக்க முதலமைச்சர் தஞ்சாவூர் செல்கிறார்.

துயரான செய்தியை அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். இறந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார். படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோருக்கும் சிறப்பான சிகிசையளிக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே தேர் விபத்து நடந்த இடத்தில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன், தஞ்சாவூர் ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தேர் திருவிழாவில் விபத்து நிகழ்ந்தது குறித்து தஞ்சை மாவட்ட பொறுப்பு தீயணைப்பு அதிகாரி பானுபிரியா கூறுகையில்,” தேரை வளைவில் திருப்பும் போது தேருடன் இருந்த ஜெனேட்டர் சிக்கியுள்ளது. ஜெனேட்டரை சரி செய்யும் போது தேரின் உச்சியில் இருந்த உயர்மின் அழுத்த கம்பியில் உரசியுள்ளது. இதனால் தேரை இழத்து மக்கள் மற்றும் சுற்றி இருந்தவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது என்று பானுப்பிரியா தெரிவித்தார்.
