'திருமாவளவனுக்கு திமுக அழுத்தம் கொடுத்ததா?'; வெளிப்படையாக பேசிய எ.வ.வேலு; சொன்னது என்ன?
திருமாவளவனுக்கு திமுக அழுத்தம் கொடுக்கவில்லை என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். ஆதவ் அர்ஜுனாவின் குற்றச்சாட்டுக்கு அவர் பதிலளித்துள்ளார்.
சென்னையில்'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் விசிக துணை பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா, தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கலந்து கொள்ள இருந்த விசிக தலைவர் திருமாவளவன், கடைசி நேரத்தில் கலந்து கொள்ளாமல் பின்வாங்கினார்.
திமுகவுக்கு எதிராக நிற்கும் விஜய் இந்த விழாவில் பங்கேற்றதால், திமுகவின் அழுத்தத்துக்கு பணிந்தே திருமாவளவன் விழாவில் கலந்து கொள்ளவில்லை என தகவல்கள் பரவின. ஆனால் திருமாவளவன் இதை மறுத்தார். மேலும் இந்த விழாவில் பேசிய ஆதவ் அர்ஜுனா ''தமிழ்நாட்டில் மன்னராட்சி நடைபெறுகிறது. பிறப்பால் இனி ஒருவர் முதலமைச்சராக கூடாது. தமிழகத்தை இனி ஒரு கருத்தியல் தலைவர்தான் ஆளவேண்டும். தமிழகத்தில் மன்னராட்சிக்கு ஒருபோதும் இனி இடம் இல்லை'' என்று திமுகவை கடுமையாக தாக்கினார்.
இதற்கு எதிராக திமுகவினர் மட்டுமன்றி விசிகவினரும் பொங்கி எழுந்ததால் ஆதவ் அர்ஜுனா விசிகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். திமுக கொடுத்த அழுத்தம் காரணமாகவே ஆதவ் அர்ஜுனாவை திருமாவளவன் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்தார் என பல்வேறு தரப்பினர் கூறினார்கள்.
இதற்கும் மறுப்பு தெரிவித்த திருமாவளவன், ''திமுக அழுத்தம் கொடுத்து இணங்கும் அளவுக்கு நானோ, விசிகவோ பலவீனமாக இல்லை'' என்று கூறியிருந்தார். இதன்பிறகு ஆதவ் அர்ஜுனா விசிகவில் இருந்து விலகினார். இதற்கு முன்னதாக ஒரு பேட்டியில் கூறிய ஆதவ் அர்ஜுனா, 'திமுக கொடுத்த அழுத்தம் காரணமாகவே விஜய் பங்கேற்ற விழாவில் திருமாவளவன் கலந்து கொள்ளவில்லை' என்றார்.
அதாவது திருவண்ணாமலையில் திருமாவளவனை சந்தித்த அமைச்சர் எ.வ. வேலு, ''விஜய் விழாவிற்கு செல்ல வேண்டாம். நீங்கள் சென்றால் கூட்டணியில் பிரச்சனையாகிவிடும். மேலும் விஜய் விழாவில் நீங்கள் பங்கேற்பதை முதல்வர் ஸ்டாலினும் விரும்பவில்லை'' என்று கூறியதாக ஆதவ் அர்ஜுனா அந்த பேட்டியில் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், அமைச்சர் எ.வ.வேலு, 'திருமாவளவனுக்கு திமுக அழுத்தம் கொடுக்கவில்லை' என்று கூறி ஆதவ் அர்ஜுனாவின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ. வேலு, ''திருமாவளவனுக்கு நான் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. அவருக்கு அழுத்தம் தரவேண்டிய தேவை திமுகவுக்கோ, எனக்கோ இல்லை.
கடந்த 2001ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற திருமாவளவனும், நானும் சட்டப்பேரவையில் பக்கத்து பக்கத்து இருக்கையில் அமருவோம். அப்போது இருந்து நாங்கள் இருவரும் நட்பு என்பதையும் தாண்டி சகோதர பாசத்துடன் பழகி வருகிறோம். சில சமயம் எதிரணியில் இருக்கும்போது கூட திருமாவளவன் என்னிடம் நட்புடன், சகோதர பாசத்துடன் பழகி வருகிறார்.
அந்த உரிமையில் நானும், அவரும் சந்தித்து பேசியதால் நான் அவருக்கு அழுத்தம் கொடுத்ததாகி விடுமா? நானும், திமுகவும் திருமாவளவனுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. திருமாவளவன் நல்ல அறிவாளி, நன்றாக சிந்திக்கக்கூடியவர். அரசியலை புரிந்து வந்திருப்பவர். சுயமாக சிந்திக்கக் கூடிய அவருக்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது. எந்த ஒரு முடிவையும் எடுக்க திருமாவளவனுக்கு முழு உரிமை உள்ளது'' என்றார்.