தமிழ்நாடு அரசு பெண்களுக்கு ரூ.1.5 லட்சம் கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தில் யார் யார் பயன்பெறலாம்? எப்படி விண்ணப்பம் செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.
சுய உதவிக் குழுக்களுக்கான சிறு கடன்
தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நடந்து வருகிறது. தமிழ்நாடு அரசு பெணகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண்களுக்கு மாதம்தோறும் உரிமைத் தொகை, பெண்களுக்கு அரசு டவுண் பஸ்களில் கட்டணமில்லா பயணம், மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இதேபோல் பிற்படுத்தப்பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத் துறை மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் ( TAMCO ) சார்பில் சுய உதவிக் குழுக்களுக்கான சிறு கடன் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
யார் யார் பயன் பெறலாம்?
அதாவது சுய உதவிக் குழு உறுப்பினர் ஒருவருக்கு ஆண்டு கடன் தொகையாக ஒன்றரை லட்சம் ரூபாய் வரை வழங்கப்பட உள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில். ''சிறுபான்மையின பெண்கள்/ஆண்கள் சுயஉதவிக் குழுக்களை அமைத்து, தனித்தனியே அல்லது சேர்ந்தோ சிறு வியாபாரம் / சிறு தொழில் செய்து தங்களது குடும்ப வருமானத்தை பெருக்கிக்கொள்ளும் வகையில் அவர்களது குழுக்களுக்கு காய்கனி கடை, மீன் வியாபாரம், பூ வியாபாரம், பலகாரக்கடை, தையல் கடை, கைத்தொழில்கள், சிறுவணிகம் போன்றவற்றை நடத்த கடன் பெறமுடியும்.
பயனாளி, சிறுபான்மை சுய உதவிக் குழுவில் அங்கத்தினராக இருத்தல் வேண்டும். குழுவில் குறைந்தது ஆறுமாதம் சேமித்தல் மற்றும் கடன் அளித்தல் பணியில் தொடர்ந்து நன்றாக செயல்பட்டு இருக்க வேண்டும். 60% சிறுபான்மையினராக அவசியம் இருத்தல் வேண்டும். எஞ்சியுள்ள 40% பிற்படுத்தப்பட்டோர்/ மிகப்பிற்படுத்தப்பட்டோர் /சீர்மரபினர் / ஆதிதிராவிடர்/பழங்குடியினர்/ இதர வகுப்பினர் இடம் பெறலாம். குழுவில் அதிகபட்சமாக 20 அங்கத்தினர்களும், குறைந்தபட்சமாக 10 அங்கத்தினர்கள் இருத்தல் வேண்டும். சிறுபான்மையினர் குழுக்களில் பெண்கள் குழுக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்'' என்று கூறப்பட்டுள்ளது.
என்னென்ன ஆவணங்கள் வேண்டும்?
இந்த திட்டத்தில் பயன்பெற வேண்டிய பயனாளிகள் மதத்திற்கான சான்று: சாதிச் சான்றிதழ் / பள்ளி மாற்றுச் சான்றிதழ் /சிறுபான்மையினர் மதம் குறித்து வழிப்பாட்டு ஸ்தலத்தால் அளிக்கப்பட்ட சான்று இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல். வருமானச் சான்றிதழ் நகல். இருப்பிட சான்றிதழ் நகல் ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்பிக்கும் முறை: அந்தந்த மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்கள், மாவட்ட ஆட்சியரகம் /மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் / மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள் / நகர கூட்டுறவு வங்கி / தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஆகியவற்றின் மூலம் இந்த திட்டங்களுக்கு விண்னப்பிக்கலாம்.
இதில் முதலாவது திட்டத்தின் கீழ் உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்ச கடன் தொகையாக ஒரு லட்சம் வழங்கப்படும். வட்டி விகிதம் ஆண்டுக்கு 7 சதவீதம் அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் தவணைத் தொகையை வட்டியுடன் திரும்ப செலுத்தலாம். நகர்ப்புறம் கிராமப்புற பகுதிகளாக இருந்தால் குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இரண்டாவது திட்டத்தின் கீழ் அதிகபட்ச கடன் தொகை உறுப்பினர் ஒருவருக்கு ஒன்றரை லட்சம் வழங்கப்படும். ஆண் பயனாளிகளுக்கு 10% வட்டி விகிதமும், பெண் பயனாளிகளுக்கு 8 சதவீத வட்டி விகிதமும் ஆண்டுக்கு கணக்கிடப்படும். அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் வரை தவணைத் தொகையை வட்டியுடன் திரும்ப செலுத்தலாம். ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
