தருமபுரி 

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தருமபுரி நகர தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் தருமபுரியில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்திற்கு நகர அவைத்தலைவர் நிவின் ரவி தலைமை வகித்தார். நகரச் செயலாளர் தங்கராஜ் வரவேற்று பேசினார். இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ.ஸ்பங்கேற்று தீர்மானங்கள் குறித்து விளக்கிப் பேசினார்.

இதில், "தர்மபுரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் உள்ள கழிவுநீர் கால்வாய்களை உடனடியாக தூர்வாரி சீரமைக்க வேண்டும். 

ஈரோட்டில் நடைபெற உள்ள தி.மு.க. மண்டல மாநாட்டில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்துகொள்ள வேண்டும். 

தர்மபுரி புறநகர் பேருந்து நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யும் முடிவை அரசு கைவிட வேண்டும்.

தருமபுரி நகரில் உள்ள சாலைகளின் மையத்தடுப்பு சுவர்களில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகளில் பெரும்பாலானவை பழுதடைந்து இரவு நேரங்களில் எரியாமல் உள்ளன. இத்தகைய மின்விளக்குகளை சீரமைத்து மீண்டும் எரியச்செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசுக்கு, தமிழக அரசு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட பிரதிநிதிகள் பாபுசேட், சுருளிராஜன், நகரதுணை செயலாளர்கள் அன்பழகன், அழகுவேல், கோமளவல்லி ரவி, நகரபொருளாளர் தியாகராஜன், முன்னாள் கவுன்சிலர் மோகன், தொண்டரணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா உள்பட கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர். 

கூட்டத்தின் இறுதியில் மாணவரணி மாவட்ட துணை அமைப்பாளர் முல்லைவேந்தன் நன்றி கூறினார்.