Tamilnadu Chief Minister today arrives in Tiruchirapalli ...

திருச்சி

காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இன்று திருச்சிக்கு வருகைதரும் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை வரவேற்க அதிமுக கட்சியினர் காத்திருக்கின்றனர். 

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க அதிமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைப்பதற்காக 'காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்கப் பொதுக்கூட்டம்' என்ற பெயரில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

அதிமுக சார்பில் நடத்தப்படும் இந்த காவிரி நதிநீர் மீட்புப் போராட்ட வெற்றி விளக்கப் பொதுக்கூட்டம் டெல்டா மாவட்டங்களில் ஜூன் 18 (அதாவது இன்று) முதல் 24-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக சென்னையிலிருந்து இன்று காலை 10.20 மணிக்குத் திருச்சி விமானம் நிலையம் வருகிறார் தமிழக முதல்வர். 

இக்கூட்டத்தில் பங்கேற்க வரும் தமிழக முதல்வரை வரவேற்க திருச்சி விமான நிலையத்துக்கு அதிமுகவினர் திரளாக வர வேண்டும் என்றும், கட்சியின் அனைத்துப் பிரிவு நிர்வாகிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்றும் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலரும், மக்களவை உறுப்பினருமான ப.குமார் அழைப்பு விடுத்துள்ளார்.

அதன்படி, திருச்சியில் முதல்வர் கட்சியினரின் வரவேற்பை பெற்றுக்கொண்டு பின்னர் நாகைக்கு புறப்பட்டுச் செல்கிறார்.