Tamil Nadu farmers met actor Rajinikanth and asked for support its a shame

தமிழக விவசாயிகள் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து ஆதரவு கேட்டது கேவலமான நிகழ்வு என்றும் அவரிடம் ஆதரவு கேட்கும் நிலையில் விவசாயிகள் இல்லை என்றும் உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம். உழவர் உழைப்பாளர் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் திருப்பூர் – பல்லடம் சாலையில் உள்ள விடுதி ஒன்றில் நேற்று நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு உழவர் உழைப்பாளர் கட்சியின் கட்சியின் தலைவர் செல்லமுத்து தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் ஈஸ்வரன் வரவேற்றுப் பேசினார். பொதுச்செயலாளர் திருநாவுக்கரசு, பொருளாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் செல்லமுத்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தமிழகத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் பல விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

விவசாய கடனை தள்ளுபடி செய்ய உத்தரவு இருந்தும், இதுவரை தமிழக விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படவில்லை. இதன்மீது அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசியலைப் பொறுத்தவரை எம்.எல்.ஏ.க்கள் பணம் பெற்ற விவகாரத்தில் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எதற்காக இருந்தாலும் பணம் கொடுத்து பெற்றுக் கொள்ளும் நிலை அரசியலில் இருந்து வருகிறது. இது வெட்ககேடான செயலாகும்.

இவற்றில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் அரசு பாலாறு உள்பட பல்வேறு ஆறுகளின் குறுக்கே பிற மாநில அரசால் கட்டப்பட்டு வரும் தடுப்பணைகள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் அடுத்த மாதம் ஜூலை 5–ஆம் தேதி மிகப்பெரிய அளவிலான போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

தமிழக விவசாயிகள் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து ஆதரவு கேட்டுள்ளனர். இது கேவலமான ஒரு நிகழ்வாகும். அவரிடம் ஆதரவு கேட்கும் நிலையில் விவசாயிகள் இல்லை. அவ்வாறு சந்திப்பில் ஈடுபட்டவர்களுக்கு எங்கள் சங்கம் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று அவர் கூறினார்.