தமிழகத்தில் கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் கொலைக் குற்றங்கள் 80 சதவீதம் குறைந்துள்ளது என்று தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். மேலும் தென்மாவட்டங்களில் கடந்த 8 மாதமாக பழிக்குப்பழி கொலை எதுவும் நடைபெறவில்லை என்று அவர் கூறினார்.

தமிழகத்தில் கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் கொலைக் குற்றங்கள் 80 சதவீதம் குறைந்துள்ளது என்று தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். மேலும் தென்மாவட்டங்களில் கடந்த 8 மாதமாக பழிக்குப்பழி கொலை எதுவும் நடைபெறவில்லை என்று அவர் கூறினார்.திருநெல்வேலியில் பழவூர் உச்சினி மாகாளி அம்மன் கோவில் திருவிழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த பெண் உதவி ஆய்வாளருடன் தனக்கு அபராதம் விதித்தற்காக வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட ஆறுமுகம் என்பவர், திடீரென கத்தியை எடுத்த பெண் காவலரை குத்தினான். சுதாரித்துக் கொண்ட சக போலீசார் அவரை வளைத்து பிடித்தனர்.

படுகாயமடைந்த பெண் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரசா, திருநெல்வேலி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையாக சேர்த்தனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இதனை தொடர்ந்து, தாக்கப்பட்ட காவல் பெண் உதவி ஆய்வாளருக்கு தொலைப்பேசி மூலம் அழைத்து ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவருக்கு பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும், மார்க்ரெட் தெரசாவை தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு நேரில் சந்தித்தார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,”தமிழக முதல்வர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு காயமடைந்த காவல் உதவி ஆய்வாளருக்கு ஆறுதல் கூறி, அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று தைரியம் கொடுத்ததோடு, அவருக்கு உடனடியாக முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்கி உத்தவிட்டார். அதற்காக காவல்துறையின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய நபர் குடிபோதையில் இருக்கும்போது நிறைய தகராறுகள் செய்வதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் மீது இதுவரை எந்தவொரு வழக்கும் இல்லை. இந்நிலையில் வாகன சோதனையில் குடிபோதையில் வந்ததாக கடந்த மாதம் வழக்கு பதிவு செய்து அபராதம் போடப்பட்டுள்ளது. இந்த ஆத்திரத்தில், திட்டமிட்டு இதுபோல தாக்குதல் நடத்தியது ஏன் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குடிபோதையா அல்லது மனநிலை பாதிப்பா என்பது விசாரணையில் தெரியவரும் என்றார்.

குடிபோதையில் ஆக்ரோஷமாக இருந்த குற்றவாளி ஆறுமுகத்தை மிக திறமையாக உடனடியாக மடக்கிப் பிடித்த மகளிர் காவலர் லட்சுமி, காவலர்கள் ரமேஷ், மணிகண்டன் ஆகிய 3 பேருக்கும் காவல்துறை சார்பில் பாராட்டுக்களும் ரொக்கப்பரிசும் வழங்கப்படும் என்றார். மேலும் பேசிய அவர், தென் மாவட்டங்களில் பழிக்குப்பழி கொலை போன்ற சம்பவங்கள் கடந்த 8 மாதங்களாக நடைபெறவில்லை என்று டிஜிபி தெரிவித்தார்.தமிழகத்தில் கடந்த ஓராண்டாக கொலைக் குற்றங்கள் குறைந்துள்ளதாகவும் கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 80 சதவீதம் கொலைக் குற்றங்கள் குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.