முதல்வர் மு.க. ஸ்டாலின், தனது சகோதரர் மு.க. அழகிரியை மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பு திமுகவில் புதிய மாற்றங்களுக்கு வழிவகுக்குமா?

மதுரையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், இதற்காக மதுரை சென்றுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று இரவு தனது சகோதரரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பையும், அழகிரி ஆதரவாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் ஸ்டாலின்:

மதுரைக்கு இன்று (சனிக்கிழமை) பிற்பகல் வந்தடைந்த முதல்வர் ஸ்டாலின், சுமார் மூன்றரை மணி நேரம் நடைபெற்ற 'ரோடு ஷோ'வில் பங்கேற்று பொதுமக்களை சந்தித்தார். அதைத் தொடர்ந்து, மதுரை முன்னாள் மேயர் முத்துவின் சிலையை திறந்து வைத்துவிட்டு, தான் தங்கியிருந்த ஹோட்டலுக்குச் சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.

பின்னர், முதல்வர் ஸ்டாலின் மதுரை டி.வி.எஸ். நகரில் உள்ள மு.க. அழகிரியின் இல்லத்திற்குச் சென்றார். அங்கு முதல்வர் ஸ்டாலினை மு.க. அழகிரியும், அவரது குடும்பத்தினரும் உற்சாகமாக வரவேற்றனர். முன்னதாக, சென்னை புறப்படும்போதே முதல்வர் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புகொண்ட மு.க. அழகிரி, இரவு உணவிற்காக தனது வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

திமுகவில் புதிய மாற்றங்கள் ஏற்படுமா?

இந்தச் சந்திப்பு அரசியல் அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இச்சந்திப்பின் மூலம் திமுகவில் புதிய மாற்றங்கள் ஏற்படுமா அல்லது மு.க. அழகிரிக்கு மீண்டும் கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. கடந்த சில ஆண்டுகளாக அரசியல் களத்தில் இருந்து ஒதுங்கியிருந்த மு.க. அழகிரி, தனது சகோதரரான முதல்வரை சந்தித்திருப்பது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.