tamil nadu assembly election will be held the end of the year

வரும் 14 ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப் பேரவை கூட்டத் தொடர் முடிந்தவுடன், தமிழக சட்டப் பேரவை கலைக்கப்படும் என்றும் இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் வரும் என்றும் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மைத்ரேயன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இரண்டாக உடைந்த அதிமுக இரு பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது. அதிமுக அம்மா அணி, அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி என இரண்டு அமைப்புகளாக இருந்து வரும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை தினகரனை ஏற்க முடியாது என அறிவித்துள்ளனர்.

டி.டி.வி.தினகரனை 10 க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களும் எம்.பி. ஒருவரும் ஆதரித்து வருகின்றனர். இதனால் தற்போது மூன்றாவது அணி ஒன்றும் உருவாகியுள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மைத்ரேயன் எம்.பி., பாரம் தாங்காமல் தமிழக அரசு தள்ளாடி வருவதாக தெரிவித்தார்.

வரும் 14 ஆம் தேதி தமிழக சட்டப் பேரவையின் கூட்டத் தொடர் தொடங்கவுள்ளதாகவும், இதையடுத்து குடியரசுத் தலைவர் தேர்தல் முடிந்தவுடன் இந்த அரசு கலைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழக சட்டப் பேரவைக்கு உறுதியாக தேர்தல் நடைபெறும் என்றும் மைத்ரேயன் தெரிவித்தார்.