tamil department in harward university....10 crore alloted by tn govt
அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அதாவது தமிழ்துறை தொடங்க 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் செளியிட்டுள்ள அறிக்கையில் , அமெரிக்க வாழ் தமிழர்களான டாக்டர்கள் வி.ஜானகிராமன், திருஞானசம்பந்தம் ஆகியோர் அமெரிக்காவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகமான ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்றை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டு நிதி திரட்டி வருவதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நிதியுதவி வேண்டி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு பொதுத் தேர்தலின்போது வெளியிடப்பட்ட அதிமுக தேர்தல் அறிக்கையில் இதற்கான வாக்குறுதி அளிக்கப்பட்டது என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
.தமிழ் மொழியின் சிறப்புகளை உலகெங்கும் கொண்டு செல்லும் வகையில், புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கென்று ஒரு தனி இருக்கை ஏற்படுத்தப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், உலகம் முழுவதும் வாழும் அனைத்து தமிழ் சமுதாயத்தின் வேண்டுகோளை பரிசீலனை செய்து, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஏற்படுத்துவதற்காக தமிழக அரசின் சார்பில் 10 கோடி ரூபாய் நிதி வழங்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஏற்படுத்துவதன் மூலம், அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டு இந்தியவியல் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
.மேலும், ஆராய்ச்சிக் கல்வியில் தமிழ் இலக்கியம், இலக்கணம், பண்பாடு தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளும் வகையில் மாணவர்களை உருவாக்குதல், அமெரிக்க நூலகங்களிலும், ஆவண காப்பகங்களிலும் உள்ள தமிழ் தொடர்பான ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்துதல், பதிப்பிக்கப்படாத ஆவணங்களை படியெடுத்து பதிப்பிக்கும் முயற்சிகளை மேற்கொள்வது போன்ற பணிகள் மூலம் தமிழ் மொழியின் வளம் உலகறிய வழி ஏற்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
