ஊட்டி;

நீலகிரியில், விதிகளை மீறி 'பொக்லைன்' இயந்திரங்களை இயக்குவது, மற்றும் ஆழ்துளை கிணறுகள் தோண்டுவதில் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில், கட்டட கட்டுமானப் பணிகளுக்கு 'பொக்லைன்' பயன்படுத்தவும், வணிக பயன்பாட்டுக்கு ஆழ்துளை கிணறு தோண்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், விவசாய பயன்பாட்டிற்கு “பொக்லைன்” பயன்படுத்தவும், ஆழ்துளை கிணறு அமைக்கவும், மாவட்ட நிர்வாகம் பல கட்ட ஆய்வுகளுக்கு பின்பே அனுமதி வழங்குகிறது.

இந்த நிலையில், ஊட்டி உள்பட பல இடங்களில் 'விவசாய பயன்பாடு' என அனுமதி வாங்கி, கட்டுமானப் பணிக்கு 'பொக்லைன்' ஓட்டுவதும், ஆழ்துளை கிணறுகளை அமைத்துக் கொள்வதும் ஆங்காங்கே நடந்து வருகின்றன.

பொதுவாக, விவசாய பயன்பாட்டிற்கே என்றாலும், இரவு நேரங்களில் 'பொக்லைன்' ஓட்ட, ஆழ்துளை கிணறுகள் வெட்ட அனுமதி வழங்கப்படுவதில்லை.

இருப்பினும், பெற்ற அனுமதியை மீறி, இரவு நேரங்களில், பல இடங்களில் கட்டுமானப் பணிக்கு பொக்லைன் அதிகளவில் பயன்படுத்தப்பட்டும், ஆழ்துளை கிணறுகள் தோண்டப்பட்டும் வருகின்றன.

சமீபத்தில், ஊட்டி அருகே தாவென பகுதியில், இரவில், அனுமதியின்றி ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்த இரு வாகனங்களை, ஊட்டி ஆர்.டி.ஓ. கார்த்திகேயன் பறிமுதல் செய்தார்.

அதேபோன்று, கூக்கல் பகுதியில், விவசாய நிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிக்கு, விதிகளை மீறி, இரவில் இயக்கப்பட்ட இரு பொக்லைன் வாகனங்களையும் பறிமுதல் செய்தார்.

இதுகுறித்து ஆர்.டி.ஓ. கார்த்திகேயன் கூறுகையில், “பறிமுதல் செய்யப்பட்ட இரு ஆழ்துளை கிணறு அமைக்கும் வாகனங்களின் உரிமம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட இரு பொக்லைன் இயந்திர உரிமையாளர்களுக்கு, தலா, ரூ.25 ஆயிரம் வீதம், ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது,” என்றார்.

இந்த நிலையில், ஊட்டி உள்பட பிற இடங்களில், கடும் பனிப்பொழிவால் இரவில் அதிகளவு குளிர் நிலவுகிறது. குளிருக்கு பயந்து, மக்கள் வீடுகளில் முடங்கி விடுவதால், இரவு நேரங்களில் நகர, கிராமப்புற சாலைகளில் ஆள் நடமாட்டம் இருப்பதில்லை.

இதனை தனக்குச் சாதகமாக்கி, பொக்லைன் ஓட்டுவதும், ஆழ்துளை கிணறுகள் தோண்டுவதும் போன்ற விதிமீறல்களில் பலர் ஈடுபடுகின்றனர்' என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதனை கட்டுப்படுத்த, மாவட்டத்தின் பல பகுதிகளிலும், இரவில் இரகசிய கண்காணிப்பு பணிகளும் தொடர்கின்றன. அதே நேரம், சில இடங்களில், கிராமப்புற மக்கள், விழிப்புடன் உள்ளனர். தங்கள் வீடுகளின் அருகே, ஆழ்துளை கிணறு அமைப்பது, பொக்லைன் ஓட்டுவது போன்ற செயல்கள் நடக்கும் போது, வருவாய் துறை அதிகாரிகளை, அவர்களது மொபைல் போன்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கின்றனர்.

இந்த விதிமீறல்களை கண்டு கொள்ளாமல் இருந்து விட்டால், மக்களின் அதிருப்தியை சம்பாதிக்க நேரிடும் என்ற பயத்திலும், மக்கள் மத்தியில் நற்பெயர் எடுக்கும் நோக்கிலும், புகார் கிடைத்த அதே நேரத்தில், வருவாய் துறை அலுவலர்கள் சம்மந்தப்பட்ட இடங்களுக்கு விரைந்து சென்று நடவடிக்கை எடுக்கின்றனர்.

ஆனாலும், இத்தகைய விதிமீறல்கள் மாவட்டத்தின் பல இடங்களில் பரவலாக தொடர்ந்து நடந்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், அபராதம் மட்டும் விதித்து, பிரச்சனைக்கு தீர்வு காணாமல், சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, விதிமீறல்களை கட்டுப்படுத்த முடியும்” என்று மக்கள் விரும்புகின்றனர்.