நடிகரும் இயக்குநருமான டி. ராஜேந்தர், செய்தியாளர் சந்திப்பின்போது, செய்தியாளர் கேள்விக்கு வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு அவர் ஆவேசமடைந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

நடிகரும், இயக்குநருமான டி. ராஜேந்தர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். முன்னதாக, டி. ராஜேந்தர், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மிகப் பிரம்மாண்டமான போராட்டம் நடைபெறுவதாக அறிவித்திருந்தார்.

ஆர்ப்பாட்டம் துவங்குவதற்கு முன்பாக, டி.ராஜேந்தர், ஜி.எஸ்.டி. வரி குறித்தும், கதிராமங்கலம் பிரச்சனை குறித்தும், சேலம் மாணவி மீது குண்டர் சட்டம் பாயப்பட்டிருப்பது குறித்தும் கண்டனம் தெரிவித்தார். மன்னராட்சியில் கூட இல்லாத வரி மக்களாட்சியில் விதிக்கப்பட்டுள்ளதாக ஜி.எஸ்.டி. வரி குறித்து டி.ராஜேந்தர் குற்றம் சாட்டியுள்ளார்.

வரி, வரி என மக்களுக்கு வலியையே கொடுப்பீர்களா? எனவும் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினார். இந்தியர்களை பிரதமர் வரிக்குதிரையாக மாற்றிவிட்டார். மோடி ஆட்சி ஆனந்தபவனாக இருக்கும் என நினைத்தால் கையேந்தி பவனாக உள்ளது என்று டி.ஆர். செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தபோது, நீங்கள் அறிவித்தது போல பெரும் போராட்டமாக இல்லையே, கூட்டம் குறைவாக இருக்கிறதே என்றும் 50 அல்லது 60 பேர்தான் இருப்பார்கள் போலிருக்கிறதே என்று செய்தியாளர் ஒருவர் கேட்டார்.

இதில் இதில் ஆத்திரமடைந்த டி. ராஜேந்தர் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு செய்தியாளரிடம் வந்தவர், ஐம்பது அறுபது பேர் தானா? வாய்யா வந்து எண்ணிப்பாரு... எண்ணுய்யா.. எண்ணு என்று ஆவேசமாக கூறினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.