அரியலூர் தலித் சிறுமி நந்தினியை கொடூரமாக கொலை செய்த இந்து முன்னணியின் ராஜசேகரனைக் கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து, கரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கரூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் (மே) சார்பில், கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா ஆர்எம்எஸ் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் பெ.ஜெயராமன் தலைமைத் தாங்கினார். மாவட்ட பொருளாளர் சதீஸ் வரவேற்றார். மாவட்ட துணைச் செயலாளர் ராமச்சந்திரன், கரூர் சட்டப்பேரவைத் தொகுதி செயலாளர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இதில், மண்டல அமைப்புச் செயலாளர் இரா.கிட்டு, கல்வி பொருளாதார மேம்பாட்டு இயக்க மாநிலச் செயலாளர் லெனின் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், அரியலூர் தலித் சிறுமி நந்தினி கொடூரமாக கொலை செய்த இந்து முன்னணியின் ராஜசேகரனைக் கைது செய்ய வேண்டும். அவருக்கு உரிய தண்டனையை விரைவில் வழங்க வேண்டும்.

சுவாதி வழக்கில் இருந்த தீவிரத்தை ஏன்? நந்தினி வழக்கில் காட்டவில்லை. சுவாதிக்கு ஒரு நியாயம்? நந்தினிக்கு ஒரு நியாயமா? சட்டம் அனைவருக்கும் ஒன்றுதானே.

மேலும், நந்தினி குடும்பத்துக்கு ரூ.50 இலட்சம் இழப்பீடும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.

கடலூர் மாவட்டம் ம.புடையூர் சூரியகலாவை பாலியல் கூட்டு வல்லுறவுக்கு ஆளாக்கிய கயவர்களை உடனே கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும்.

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

இதில், மாநில துணைச் செயலாளர் வழக்குரைஞர் பகலவன், கதிரேசன், கரூர் மக்களவைத் தொகுதி செயலாளர் துரைசெந்தில் உள்ளிட்ட கட்சியினர் கூட்டமாகப் பங்கேற்றனர்.